Friday, December 02, 2011மகளிர் நலன் திட்டங்களை முன்னெடுப்பதற்காக நோர்வே அரசாங்கம் இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்கியுள்ளது.
மகளிர் நலத் திட்டங்களை முன்னெடுப்பதற்காக நோர்வே அரசாங்கம் சுமார் 18.5 மில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளது.
மகளிர் விவகார மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சின் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது.
போதியளவு போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தினால் இந்த உத்தியோகத்தர்களினால் பணிகளை செவ்வனே மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்பட்டது.
நோர்வே அரசாங்கத்தின் நிதி உதவியைப் பயன்படுத்தி சுமார் 120 மோட்டார் சைக்கிள்கள் கொள்வனவு செய்யபப்ட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
நாட்டின் முக்கிய பிரதேசங்களில் பால் நிலை சமத்துவத்தை வலியுறுத்தும் வகையிலான பாரிய விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட உள்ளன.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் சனத்தொகை நிதியத்தின் ஊடாக இந்த உதவிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிதி உதவி வழங்கும் வைபவம் மகளிர் விவகார மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்றது.
நோர்வே தூதுவர் ஹில்டே ஹரால்ஸ்டாட் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சனத்தொகை நிதியத்தின் பிரதிநிதி லீனே கிறிஸ்டியன் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த மற்றும் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமைச்சின் செயலாளர் சுனேத்ரா ராஹூபத்த ஆகியோர் இந்த நிகழ்வில் உரையாற்றினர்.
மகளிர் நலனை மேம்படுத்துவதற்கு அடிமட்ட நிலையிலிருந்து முனைப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென நோர்வே தூதுவர் ஹில்டே தெரிவித்துள்ளார்.
யுத்த வலயத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அபிவிருத்தி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களின் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றினை உறுதிப்படுத்த பங்களிப்பு வழங்க முடிந்தமை மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் மகளிர் அபிவிருத்தி திட்டங்களுக்கு நோர்வே தொடர்ச்சியாக ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment