Friday, December 9, 2011

சந்தனம், குங்குமம், இனிப்பு கொடுத்து தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு கேரள மக்கள் வரவேற்பு!

Friday, December 09, 2011
செங்கோட்டை : முல்லை பெரியாறு அணை தொடர்பாக தமிழகம் கேரளா இடையே பிரச்னை முற்றி வருகிறது. கேரளாவில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். தமிழர்கள் கடைகள் நொறுக்கப்பட்டன. அதேபோல் தமிழகத்திலும் கேரளாக்காரர்கள் கடைகள் சேதப்படுத்தப்பட்டன. முல்லை பெரியாறு அணை பிரச்னையால், தேனி, குமுளி வழியாக சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டது. வாகனங்கள் அனுமதிக்கப்படாததாலும், வன்முறை சம்பவங்களாலும் பலர் கோயிலுக்கு செல்லாமல் திரும்பி விட்டனர். பல பக்தர்கள் நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக சபரிமலை செல்கின்றனர். இதனால் செங்கோட்டை வழியாக செல்லும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நல்லெண்ண நடவடிக்கையாக கேரளாவின் ஆரியங்காவு பகுதியில் தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு பூ, சந்தனம், குங்குமம், மற்றும் இனிப்பு வழங்கி வரவேற்பு அளிக்கப்படுகிறது. நேற்று ஆரியங்காவு பஞ்சாயத்து தலைவி ஐயம்மாள், துணை தலைவர் சலீம், மற்றும் அப்பகுதி மக்கள் சபரிமலை செல்லும் பக்தர்களை வரவேற்று உபசரித்து சபரிமலை பயணம் சிறப்பாக அமைய வாழ்த்தி அனுப்பினர். இந்த வரவேற்பு தமிழக பக்தர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது. அத்துடன் ஆரியங்காவு, தென்மலை பகுதியில் தமிழக ஐயப்ப பக்தர்களின் பசி போக்க கேரள மக்கள் அன்னதானம் வழங்குகின்றனர்.

No comments:

Post a Comment