Thursday, December 8, 2011

தமிழகத்தில் மலையாளிகள் நடத்தும் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு!

Thursday,December, 08, 2011
சென்னை : முல்லைப் பெரியாறு விவகாரத்தில், சென்னையில் மலையாளிகள் நடத்தும் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணை விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால், தமிழக & கேரள எல்லை பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. கேரளாவுக்கு வாகனங்கள் செல்ல முடியாமல் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. கேரளாவில் தமிழக வாகனங்கள் தாக்கப்பட்டதால், குமுளி பகுதியில் பதற்றம் காணப்படுகிறது.

இந்நிலையில், கேரள அரசின் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் மலையாளிகள் நடத்தும் கடைகள், ஒரு சில பகுதியில் அடித்து நொறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. சம்பவ இடங்களுக்கு போலீ சார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே, தி.நகர் வடக்கு உஸ்மான் ரோட்டில் ஜோய் ஆலுக்காஸ் நகைக்கடை மீது தாக்குதல் நடத்தப் போவதாக பாண்டிபஜார் போலீசுக்கு தகவல் வந்தது. உடனடியாக, இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் தலைமையிலான போலீ சார் அங்கு குவிக்கப்பட்டனர்.

அப்போது, தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் அருண்பாரதி தலைமையில் வெற்றி தமிழன், தமிழ்க்கனல், தமிழ்ச்செல்வன், நாத்திக கேசவன், செழியன் ஆகியோர் கேரளாவுக்கு எதிராக கோஷம் போட்டுக்கொண்டு வேகமாக வந்த னர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, போலீசுக்கும் அவர்களுக்கும் தள்ளமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் 6 பேரையும் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவின் பேரில் தென்சென்னையில் இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் தலைமையில் தி.நகர், சைதாப்பேட்டை, அசோகநகர், தேனாம்பேட்டை மற்றும் முக்கிய பகுதிகளில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் வைத்திருக்கும் நகைக் கடைகள், ஓட்டல்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, தி.நகரில் உள்ள அனைத்து நகைக்கடைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை நகர் முழுவதும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் நடத்தும் ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள், கேரள சமாஜம், அண்ணா நகர், மகாலிங்கபுரம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப் பன் கோயில்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகளில் ஆயுதப்படை போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment