Thursday, December 29, 2011

பெண்களிடம் நகை பறித்த ‘விக்’ கொள்ளையன் கைது!

Thursday,December 29, 2011
ஈரோடு: ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் ஸ்டாப் அருகே இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த ஒருவரிடம் சந்தேகத்தின்பேரில் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார். அவர், கோவை காளப்பட்டி தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த ராஜேஷ் என்ற சத்யபிரகாஷ் (39) என்பதும் ரோட்டில் நடந்து செல்லும் பெண்களிடம் 35 பவுன் நகைகளை கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

2003-ம் ஆண்டில் கோவை சிங்காநல்லூர், பீளமேடு, சாய்பாபா காலனி உள்ளிட்ட இடங்களில் 16 பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக கைதான சத்யபிரகாஷ், சிறை தண்டனை பெற்றுள்ளார். பொள்ளாச்சியில் ஒரு பெட்ரோல் பங்க்கில் பணம் பறித்த வழக்கிலும் கைதானவர் என்று தெரிந்தது. வழிப்பறி செய்ய பைக்கில் கிளம்பும்போது, ‘விக்’ வைத்து தலைமுடி நீளமாக உள்ளதுபோல் காட்டிக்கொள்வார்.

நகையை இழந்தவர்கள் போலீசிடம் அடையாளம் சொல்லும்போது நீளமான தலைமுடி வைத்திருப்பார் என்று சொல்வார்கள். வழிப்பறியில் ஈடுபட்ட பிறகு சிறிது நேரம் கழித்து அதே இடத்துக்கு மீண்டும் சென்று போலீசார் விசாரணை நடத்துகின்றனரா, பாதிக்கப்பட்டவர் புகார் தருகிறாரா என்பதை கவனிப்பாராம். போலீஸ் விசாரணையின் போக்கை பார்த்து, அடுத்த வழிப்பறியின்போது எப்படி செயல்பட வேண்டும் என திட்டமிடுவாராம். கைது செய்யப்பட்ட சத்யபிரகாஷை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்த பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment