Thursday, December 8, 2011

விலைவாசி உயர்வை தடுக்க தமிழக அரசு முயலவில்லை : நூலகம் திறப்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Thursday,December,08,2011
சென்னை : விலைவாசி விஷம் போல் ஏறுகிறது. அதை தடுக்க தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை வடபழனியில் உள்ள அண்ணா பொது நலமன்றம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள அண்ணா நூலகத்தின் திறப்பு விழா வடபழனி சன்னதி தெருவில் நேற்று நடந்தது. இதை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து ரூ.3 லட்சத்தை 3 ஆயிரம் பள்ளி மாணவ, மாணவிகளின் பெயரில் ரூ.100 வீதம் சிறுசேமிப்பு திட்டமாக தொடங்கி வைத்தார். தையல் பயிற்சி, பெற்றோருக்கு சான்றிதழ், அண்ணா பொதுநல மன்றத்துக்கு ஆம்புலன்ஸ் சாவியை வழங்கினார். விழாவுக்கு அண்ணா பொது நலமன்ற செயலர் கு.க.செல்வம் தலைமை தாங்கினார். மன்றத் தலைவர் சே.கண்ணப்பன் வரவேற்றார். முன்னாள் மேயர்கள் சா.கணேசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தார், வி.ஜே.புருஷோத்தமன் நன்றி கூறினார்.

விழாவில் மு.க.ஸ்டா லின் பேசியதாவது: இந்த ஆட்சியில் நான் எந்த நேரத்திலும் கைது ஆகலாம். அதைப்பற்றி கவலைப்படவில்லை. என் மீதும் என் மகன் உதயநிதியையும் சேர்த்து 6 பேர் மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. அதில் இன்று உதயநிதியும், ராஜாசங்கரும் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். நான் முன்ஜாமீன் கேட்கவில்லை. எனவே என்னை எந்த நேரத்திலும் கைது செய்யலாம். அதை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். இந்த நூலகத்திற்கு திமுக இளைஞரணி சார்பில் விரைவில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள நூல்கள் வழங்கப்படும். 1968 முதல் இந்த மன்றம் செயல்பட்டு வருகிறது. மன்றம் சார்பில் நிறுவப்பட்டுள்ள அண்ணா சிலை இன்று திறக்கப்படவில்லை. கடைசி நேரத்தில் சட்ட சிக்கலை காரணம் காட்டி, போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். எனவே அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அண்ணா சிலை திறப்பதை அண்ணா பெயரில் அமைத்துள்ள ஆட்சி தடுக்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் நடக்கும் கொடுமைகள், அக்கிரமங்கள் ஏராளம். விலைவாசியை குறைப்பேன் என்றார். ஆனால் பஸ் கட்டணம், பால் விலையை உயர்த்திவிட்டார். மின்கட்டணம் உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார். விலைவாசி விஷம் போல் ஏறுகிறது. அதை தடுக்க இந்த ஆட்சி முயலவில்லை. எம்.ஜி.ஆர் ஆட்சியில் சத்துணவு அமைப்பாளராக அதிமுகவினர் நியமிக்கப்பட்டனர். அவர்களை கருணாநிதி பணி நிரந்தரம் செய்தார். அந்த பெருந்தன்மையை ஜெயலலிதாவிடம் எதிர்பார்க்க முடியாது. திமுகவை அழித்துவிடலாம் என்று ஜெயலலிதா முயற்சிக்கிறார். திமுகவை யாராலும் அழிக்க முடியாது. ஒரு ஸ்டாலினை சிறையில் அடைத்தால், லட்சம் ஸ்டாலின்கள் உலா வருவார்கள். அதற்காக செய்யாத தவறுக்காக தண்டனை அனுபவிக்க மாட்டோம். சட்டப்படி வழக்கை சந்திப்போம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

No comments:

Post a Comment