Sunday, December 04, 2011எனக்குத் தமிழ் மொழியில் ஐந்து வார்த்தைகள் பேச முடியுமாயின் இந்நாட்டு குடி மக்களது பெருமைமிகு தந்தைகளில் ஒருவனாக நான் திகழ்வேன் என்று தகவல் ஊடகத் துறை அமைச்சர் கெஹெலியா ரம்புக்வெல்ல இன்று கண்டி ஹந்தானை சிவானந்தா தமிழ் வித்தியாலய வருடாந்தப் பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், எமது சகோதர மொழியான தமிழ் மொழியைப் பேச முடியாமைக்கு நான் வெட்கப்படுகின்றேன். ஏனெனில் இந்த நாட்டு மக்களில் 95 சதவீதத்தினருக்கு பிரதான மொழிகளான தமிழ், சிங்கள மொழிகளைப் பேச முடியுமாயின் எமது பிரச்சினைகளில் அநேகம் வெறுமனே தீர்ந்து விடும். கடந்த முப்பது வருடங்களாக நாம் இருள் சூழ்ந்த ஒரு காலகட்டத்தில் இருந்தோம்.
தற்போது ஒளிமயமான ஒரு காலகட்டத்தின் ஆரம்பத்தில் இருக்கின்றோம். எனவே நாடு சுபீட்சமடைய வேண்டுமாயின் சகல தரப்பினரும் சமாந்தரமாக முன்னேற வேண்டும். ஒரு தரப்பு மட்டும் பின்னிற்க முடியாது. அப்படியாயின் பெருந்தோட்டப் பகுதி கல்வி அபிவிருத்திக்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து உதவ வேண்டும்.
அவ்வாறாயின் மட்டுமே ஜனாதிபதியின் இலக்கான ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக எமது நாட்டை மாற்ற முடியும். ஜனாதிபதிக்கு ஓர் இலக்கு இருக்குமாயின் அதற்கு இசைவான ஓர் இலக்கு அரசியல்வாதிகளான எம்மிடமும் இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் எமது பிரதேசமான பெருந்தோட்டப் பகுதி மக்களின் கல்வி வளர்ச்சிக்குப் பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பது எமது நோக்கமாக இருக்க வேண்டும்.
முன்னேற்றம் கண்ட பாடசாலைகளுக்கு உதவுவதற்கு பல்வேறு அமைப்புகளும் தனி நபர்களும் முன் வருவது போல பின்தங்கிய பகுதிப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய முன்வருவோர் மிகக் குறைவு. எனவே தோட்டப்புறப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் விடயத்தில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
பரிசளிப்பு வைபவங்கள் மூலம் வெற்றி பெற்ற மாணவனுக்கு தனது திறமை மற்றும் தனது இலக்கு பற்றிய தன்னம்பிக்கை ஏற்படுகிறது என்றார்.
No comments:
Post a Comment