Tuesday, December 6, 2011

பிரிவினைவாத,பயங்கரவாத புலிகளால் சிறுவர் போராளிகளாக இணைக்கப்பட்ட பிள்ளைகளை தங்கள் குடும்பத்தினர் இன்னமும் எதிர்பார்த்த வண்ணமே இருக்கின்றனர்!

Tuesday, December 06, 2011
புலிகள் எனப்படும் பிரிவினைவாத, பயங்கரவாத, புலிகளால் வலுக்கட்டாயமாக அவர்களது இயக்கத்தில் இணைக்கப்பட்ட சிறுவர் போராளிகளை, அவர்களது குடும்பத்தினருடன் இணைத்துவைப்பதற்காக, அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்களுக்கான சர்வதேச நிதியம் (யுனிசெஃப்) ஆகியவை இணைந்து கூட்டுத்திட்டங்களை அமுல்படுத்திய போதிலும், அதிகமான சிறுவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இன்னும் இணைக்கப்படவில்லை.

அரசாங்கமும் யுனிசெப்பும் இணைந்து திட்டமிட்டுள்ள குடும்பத் தடம் காணும் பிரிவானது (எப்.ரி.யு) பதிவுகள் மூலம், நாளாந்தம் பிள்ளைகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. இதன் மூலம் தாய்மார்களுக்கு மத்தியில் குடும்பத் தடம் காணும் பிரிவின் மீது நம்பிக்கை உண்டாகியுள்ளது என “த எகனொமிஸ்ட்” சஞ்சிகையில் இலங்கை முன்னாள் சிறுவர் போராளிகளின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை தேடிக் கண்டறிதலில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனை தொடர்பாக வெளியிடப்பட்டிருந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சிறுவர்களில் பலர் 2009 இறுதிக்கட்டப் போரின் போது இலங்கைப்படையினருக் கெதிராக போரிடுவதற்காக வழுக்கட்டாயமாக கொண்டு செல்லப்பட்டவர்களாகும்.

இச் சஞ்சிகையில், காணாமற் போன சிறுவர்களை பயங்கரவாதிகள் எவ்வாறு தமது தேவைகளுக்காக பயன்படுத்தினார்கள் என்பது பற்றியும் இதன் விளைவால் இன்றுவரை அக் குடும்பங்களும் அதிகார சபைகளும் இவர்களை தேடிக்கண்டறிய எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

த இகொனமிஸ்ட்” எனும் சஞ்சிகையில் இருந்து எடுக்கப்பட்ட ஆவனத்தின் மொழிபெயர்ப்பு

2009 இல் இலங்கையின் வடபகுதியின் கொந்தளிப்பான யுத்தப் பிரதேசத்தை விட்டு சாந்தகுமார் கமலா, வெளியேறியபோது அவர் மங்கலான புகைப்படங்கள் சிலவற்றை தனது மார்போடு அணைத்தபடி, ஏனைய முக்கிய பொருட்கள் சிலதையே எடுத்துக்கொண்டு வெளியேறியிருந்தார். திருமதி. சாந்தகுமார் இப்போது காண்பிக்கும் படங்களில், ஒன்றில் பள்ளிச் சீருடையணிந்து கம்பீரத் தோற்றத்தில் காட்சிதரும் ஒரு பையனின் உருவம் தெரிகிறது, மற்றொன்றில் அந்தப்பையன் படைவீரர் அணியும் சீருடையில் தோற்றமளிக்கிறான்;.

கண்ணீருடன் தேம்பியபடி தனது மகன் தனுராஜ் தனக்கு திரும்பவும் வேண்டும் என்கிறார் அவர் நூற்றுக்கணக்கான மற்றைய சிறுவர்களைப் போலவே 2009ல் ஸ்ரீலங்கா இராணுவத்தினருக்கும் தமிழ் புலிகள் என்கிற எல்.ரீ.ரீ.ஈ யினருக்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தின் பயங்கரமான கடைசி மாதங்களில் தனுராஜூம் காணாமற் போயிருந்தார். ஒரு சில சிறுவர்கள் அவர்களின் குடும்பத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது தந்த ஊக்கத்தினால் அவரது தாயார் அவரை தொடர்ந்தும் ஆவலுடன் தேடி வருகிறார்.

பெப்ரவரி 2009 இல் எண்ணிக்கையில் குறைவடைந்து போய்க்கொண்டிருந்த தமிழ் புலிகள், வீதியோர பதுங்கு குழி ஒன்றில் உறங்கிக் கொண்டிருந்த 16 வயதான தனுராஜைப் பலவந்தமாக இழுத்துக் கொண்டுபோய் படையில் சேர்த்தனர். அவரது அன்னையிடம் அவரது குடும்பம் சண்டைக்கு மற்றொரு பிள்ளையை புலிகளிகள் இயக்கத்திற்கு வழங்கத் தேவையில்லை என்பதை உறுதிப்படுத்தும் அச்சிடப்பட்ட அட்டையொன்றை அவர்கள் கொடுத்துவிட்டுச் சென்றார்கள்.

போராளிகளின் கடைசிக் கோட்டையாக விளங்கிய ஈரமில்லாமல் வரண்ட ஒரு கடற்கரையோர துண்டு நிலப்பகுதியில், தனது மகன் திரும்பவும் தோன்றுவான் என்கிற நம்பிக்கையில் மோசமான சண்டையின் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு திருமதி. சாந்தகுமார் வாரக் கணக்கில் காத்திருந்தார். ஆனால் 2009 மே,17 இல் அரசாங்கப் படையினர் இறுதித் தாக்குதலுக்கு நெருங்கியபோது, அச்சமடைந்த பொதுமக்கள் அலைபோலத் திரண்டு அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்கு ஓடியபோது அவர்களோடு அவரும் இணைந்து கொண்டார். அதற்கு இரண்டு நாட்களின்பின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எல்.ரீ.ரீ.ஈயினரை வெற்றி கொண்டுவிட்டதாக அறிவித்தார்.

அதன்பின்னர் பிரிந்துபோன குடும்ப அங்கத்தவர்களை கண்டுபிடித்துச் சேர்ப்பதற்காக அதிகாரிகள் மாதக்கணக்காகப் போராடினார்கள். அது ஒரு சிறப்புமிக்க முக்கிய பணியாக இருந்தது. வைத்தியசாலைகளின் விளிம்புவரை காயமடைந்தவர்களால் நிரம்பியிருந்தன, முகாம்கள் யாவும் இடம்பெயர்ந்தவர்களால் நிறைந்து வழிந்தன,மற்றும் போர்க்களம் இறந்த உடல்களால் மூடப்பட்டு குப்பைமேடாக காட்சியளித்தது. ஆரம்பத்தில் சிறிதளவு பதிவுகளே மேற்கொள்ளப்பட்டு வந்தன.பின்னர் சிங்களம் பேசும் அரச உத்தியோகத்தர்கள் தங்களுக்கு அறிமுகமில்லாத தமிழ்ப் பெயர்களை குரல் ஒலி சார்ந்த வகையில் தவறாக எழுதினார்கள். இது காணாமற்போனவர்களை தேடுவதை மேலும் சிக்கலாக்கியது.

பிள்ளைகள் பிரிந்துபோய் வெகுவாக பாதிப்படைந்துள்ளமை நிரூபணமாகியது. ஏழு வயது நிரம்பிய ராஜேஸ்வரன் விதூஷனைப் போன்ற பிள்ளைகள் சிலர் ஒரு அனாதை இல்லத்தை சென்று சேருவதற்கு முன்னர் காயமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுக் கொண்டேயிருந்தார்கள். ஒரு எறிகணைத் தாக்குதல் விதூஷனின் சகோதரி, பாட்டன், மற்றும் பாட்டி ஆகியோரின் உயிர்களைப் பறித்ததோடு அவனை ஒரு சிதைந்த காலோடு விட்டுச் சென்றிருக்கிறது.

மற்றவர்களில் 16 வயதான சுப்பிரமணியம், லில்லிமலரைப் போன்றவர்கள், அவர்களின் பெற்றோர் சிகிச்சைகளுக்காக விரைந்து அழைத்துச் செல்லப்பட்டதினால் அவர்களுடைய தொடர்புகளை இழந்துவிட்டனர். லில்லிமலரின் காயமடைந்த தாயாரும் ஒரு சகோதரியும் ஒரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவளது இரண்டாவது சகோதரியும் மற்றும் தந்தையும் வேறொரு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். லில்லிமலரை ஒரு சிறுவர் இல்லத்துக்கு எடுத்துச் செல்வதற்கு முன்பு, அவள் தனது காலில் பட்ட காயத்தை குணப்படுத்துவதற்காக மூன்றாவது ஒரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.

மேலும் அநேகரமானோர், யுத்தத்திலிருந்து தப்பிப்பதற்காக குறுகிய பாலங்கள், நீர் நிரம்பிய அகழிகள் குண்டும் குழியுமான சாலைகள் என்பனவற்றைக் கடந்து ஓடுகையில் தங்கள் பெற்றோர்களிடமிருந்து பிரிந்து போயுள்ளனர். சிலர் போராளிகளால் சேர்த்துக் கொள்ளப்பட்டனர், சிலர் வெவ்வேறு பேரூந்துகளில் ஏற்றப்பட்டு வேறு முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிலர் தங்கள் குடும்பத்தினர்களை சோதனைச்சாவடிகளில் தொலைத்தனர் அல்லது அரசாங்கத்தின் தடுப்புக்காவலில் பிடித்து வைக்கப்பட்டனர்.

யுத்தத்தின் பின்னான ஆரம்ப காலகட்டத்தில் கிட்டத்தட்ட 2,000 வரையான சிறார்கள் தங்கள் பெற்றோர்களுடன் மீளிணைக்கப்பட்டனர். ஆனால் பெற்றோர்கள் தொடர்ந்தும் தங்கள் பிள்ளைகளைத் தேடி வருவதால், அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்களுக்கான சர்வதேச நிதியமும் (யுனிசெஃப்) கூட்டாக இணைந்து குடும்ப தடம் காணும் பிரிவு (எப்.ரி.யு) ஒன்றை டிசம்பர் 2009ல் ஆரம்பித்தன.

காணாமற்போன குழந்தைகளை தேடும் குடும்பங்களிடமிருந்து செப்டம்பர் 2009 வரை 690 விண்ணப்பங்கள் இந்தப் பிரிவுக்கு கிடைத்துள்ளன. இவற்றில் 490 விண்ணப்பங்கள் எல்.ரீ.ரீ.ஈயினரால் கட்டாய ஆட்சேர்ப்புக்கு ஆளானவர்கள் சம்பந்தமானது. இதன்மூலம் 29 சிறார்கள் மட்டும் தங்கள் குடும்பத்துடன் மீளவும் இணைந்து கொண்டுள்ளார்கள்.

குடும்ப தடம் காணும் பிரிவு ஊழியர்கள் தினசரி பதிவுகள் குவியலுக்குள் வலைபோட்டு தேடி வருகிறார்கள். இவைகள் காவல்துறை, வைத்தியசாலை மற்றும் அனாதை இல்லங்கள் சம்பந்தமான பதிவுகளாகும் அதேபோல இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த முகாம்களின் பதிவுப் புத்தகங்களையும் ஆராய்ந்து வருகிறார்கள். ஒரு பிள்ளையைத் தேடிக் கண்டுபிடித்தால்கூட, அடையாளங்களை ஆராய்தல், பிறப்புச்சாட்சிப் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களைக் கண்டுபிடித்தல், (பெரும்பாலான பெற்றோர்கள் யுத்தகளத்தை விட்டு ஓடும்போது புகைப்படங்களுடனேயே ஓடினார்கள்,ஆவணங்களுடன் அல்ல) மற்றும் பிள்ளையைத் திரும்பவும் பெற்றோரிடம் கையளிப்பதற்கான நீதிமன்ற அனுமதியை நாடுதல் போன்ற விடயங்கள் சம்பந்தமான நடவடிக்கைகள் பூர்த்தியாவதற்கு மாதக் கணக்காகும்.

மிகவும் குறைந்த விகிதத்திலான மீள் இணைப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும் கூட, குடும்ப தடம் காணும் பிரிவு பல அன்னையரிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. திருமதி கமலா தனது மகன் தனுராஜ் பற்றிய விபரங்ககளை அதன் தரவுத்தளத்திற்கு வழங்கியுள்ளார். விதுஷனின் தாயார்கூட தனது மகனை இந்தப் பிரிவு மூலமே கண்டுபிடித்தார்.மேலும் லில்லிமலர் தனது குடும்பத்தினரை திரும்பவும் அடைந்தது இந்தப் பிரிவின் உதவியினால்தான்.

சாதாரணமாக தகவல்களை அறிந்து கொள்வதற்காக அநேக குடும்பங்கள் தொடர்ந்தும் இந்தப் பிரிவை அழைத்தவண்ணமே உள்ளனர். சிலவேளைகளில் அவர்கள் வாய்விட்டு அழுவார்கள், சிலவேளைகளில் மௌனமாகத் தொலைபேசி அழைப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால் முயற்சி செய்வதை அவர்கள் ஒருபோதும் நிறுத்தி விடவில்லை.

No comments:

Post a Comment