Friday, December 09, 2011இலங்கை: அமெரிக்காவுக்கு எதிராக உலகநாடுகளிலுள்ள அனைத்து முஸ்லிம் மக்களும் அணிதிரள வேண்டும் என மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா அழைப்பு விடுத்தார்.
நேட்டோவுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் கொழும்பு தெவட்டகஹா பள்ளிவாயிலுக்கு முன்பாக இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ஆளுநரால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.
நேட்டோ படைகள் முஸ்லிம் நாடுகளுக்கு எதிராக தொடர்ந்தும் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றன. லிபியாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், ஈரானுக்கு எதிரான தாக்குதல் என அதன் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றன.
தற்போது பாகிஸ்தானில் தமது அராஜக நடவடிக்கைளை ஆரம்பித்துள்ளது. அதன் விளைவாக 28 பாகிஸ்தானிய இராணுவ வீரர்கள் அண்மையில் கொல்லப்பட்டார்கள். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
நேட்டோ படைகள் முன்னெடுத்துவரும் இவ்வாறான மனிதாபிமானமற்ற செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு முஸ்லிம் நாடுகள் ஒன்றுபட வேண்டும். அப்போதே இவ்வாறான அராஜக செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்...
இலங்கை பாகிஸ்தான் நட்புறவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் மேர்வின் சில்வா, மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா மற்றும் கொழும்பு மாநகரசபை உறுப்பினரான அசாத் சாலி உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்காவுக்கும் நேட்டோ படைகளுக்கும் எதிராக பல்வேறு வாசகங்கள் பொறித்த சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒபாமா ஒழிக", 'அமெரிக்காவின் கைப்பொம்மையான பான் கீன் மூன் ஒழிக" மற்றும் 'சதாம் ஹுசைன், கடாபி, பாகிஸ்தான் இராணுவம் ஆகியோரை அமெரிக்காவே கொன்றொழித்தது" போன்ற கோஷங்களையும் எழுப்பியவாறு தெவட்டகஹா பள்ளிவாயிலிலிருந்து லிப்டன் சுற்றுவட்டம் வரை பேரணியாக ஆர்ப்பாட்டம் நகர்ந்தது.
இன்று பிற்பகல் 1 மணியளவில் ஆரம்பமான இவ்வார்ப்பாட்டமானது சுமார் அரை மணித்தியாலங்கள் இடம்பெற்றது. இதனால் அப்பகுதி ஊடான போக்குவரத்து ஓரளவு பாதிக்கப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment