Wednesday,December,14,2011இலங்கை:ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இலங்கை வருகிறார் என ஐ.நா. சபை வட்டாரங்களில் இருந்து நம்பகரமாகத் தெரியவருகிறது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் வருடாந்தக் கூட்டத் தொடர் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள நிலையில், நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயமானது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையலாம் என இராஜதந்திரிகள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கும் கையோடு அந்த அறிக்கையின் பிரதியொன்றை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவர் நவிப்பிள்ளைக்கும் அனுப்பிவைக்க அரசு தீர்மானித்துள்ளது.
ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான பிரதிநிதி, ஆணைக்குழுவின் அறிக்கையை நவநீதம்பிள்ளையிடம் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் கையளிப்பார் என அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை ஆழமாக ஆராய்ந்த பின்னர் அறிக்கை குறித்து ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் நிலைப்பாட்டை நவநீதம்பிள்ளை அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் விவாதிப்பது தொடர்பில் இலங்கை அரசின் நிலைப்பாட்டை நவநீதம்பிள்ளை கொழும்பு வரும் போது கேட்டறிவார் எனத் தெரிவிக்கப்படும் அதேவேளை, அறிக்கை குறித்து தனது நிலைப்பாட்டை இலங்கை அரசிடம் உத்தியோகபூர்வமாகவும் அவர் அறிவிப்பார் எனத் தெரியவருகிறது.
இலங்கை விஜயத்தின் போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உட்பட முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்துவதற்கும் நவநீதம்பிள்ளை திட்டமிட்டுள்ளார்.
நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் ஜனவரி மாதம் முதல் வாரத்திலேயே இடம்பெறவிருந்தது. எனினும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை விவகாரத்தால் அவரின் விஜயம் பிற்போடப்பட்டது. தற்போது பெப்ரவரி மாதம் முதல்வாரத்தில் அவர் இலங்கை வருவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை விரைவில் வெளியிடுவோம் என்றும், அந்த அறிக்கையின் பிரதியொன்றை ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு கையளிப்போம் என்றும் இலங்கை அரசு உறுதியளித்துள்ளதை அடுத்தே, நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்வதற்குத் தீர்மானித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment