Saturday, December 10, 2011

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவதை கொடுக்க முடியாவிட்டால் அரசாங்கம் உத்தேசிப்பதையாவது வழங்க வேண்டும்-ஜே.வி.பி.!

Saturday, December 10, 2011
இலங்கை:இனப்பிரச்சினைக்கான தீர்வில் அரசாங்கம் காட்டும் அசமந்தப் போக்கினால் நாடு துண்டாடப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவதை கொடுக்க முடியாவிட்டால் அரசாங்கம் உத்தேசிப்பதையாவது வழங்க வேண்டும் என்று ஜே.வி.பி குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவும் மேற்குலக நாடுகளும் தேசியப் பிரச்சினையில் நேரடியாக தலையிட ஆரம்பித்துள்ளன. இதற்கு அரசின் முட்டாள்தனமான செயற்பாடுகளே காரணமாகும். இந்தநிலை தொடரும் போது தேசிய பாதுகாப்பும் நாட்டின் இறையாண்மையும் கேள்விக்குறியாகிவிடும் என்றும் அக் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஜே.வி.பி. யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறுகையில்

யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாணாது தவறிழைத்துள்ளது. பேச்சுவார்த்தைகள் என்று இழுபறி நிலையை தோற்றுவித்து ஏனைய நாடுகள் உள்நாட்டு விடயங்களில் தலையிடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. தேசியப் பிரச்சினைக்கான தீர்வில் அரசாங்கம் செய்யும் தவறுகளினால் இந்தியாவும் ஏனைய மேற்குலக நாடுகளும் தலையிட்டு அதிகாரப் பகிர்வு மற்றும் தனிநாடு என்பவற்றை உறுதிப்படுத்தப் போகின்றன.

வடக்கில் மீள்குடியேற்றம், சிவில் நிர்வாகம், காணாமல் போதல், அரசியல் கைதிகள் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடுகள் வழங்குதல் உட்பட இன்னோரன்ன பிரச்சினைகள் அரசினால் தீர்த்து வைக்கப்படவில்லை. இவ்வாறான சாதாரண விடயங்களை செய்யாது தேசிய தீர்வுத்திட்டம் தொடர்பில் இழுபறி நிலையைத் தோற்றுவிப்பது மீண்டும் போராட்டங்களுக்கே வழிவகுக்கும் எனக் கூறினார்

No comments:

Post a Comment