Tuesday, December 27, 2011

திருச்சிக்கு பிரதமர் மன்மோகன் சிங் சென்ற விமானத்துக்கு குண்டு மிரட்டல்!

Tuesday, December,27, 2011
தாம்பரம்: திருச்சிக்கு பிரதமர் சென்ற தனி விமானத்துக்கு குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக 2 பேரிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். கணித மேதை ராமானுஜனின் 125வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங் சென்னை வந்தார். நிகழ்ச்சியை முடித்து கொண்டு காரைக்குடியில் நடக்கும் பல்கலைக்கழக விழாவில் பங்கேற்க தனி விமானத்தில் திருச்சிக்கு புறப்பட்டு சென்றார். பிரதமர் புறப்படுவதற்கு முன் நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு, பல்லாவரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது.

எதிர்முனையில் பேசிய ஆண், ‘சென்னையில் இருந்து திருச்சிக்கு பிரதமர் செல்லும் தனி விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது சிறிது நேரத்தில் வெடித்து சிதறும்Õ என்று கூறி தொடர்பை துண்டித்தார். அதிர்ச்சி அடைந்த போலீசார் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், அதற்கு முன்பே பிரதமர் பயணம் செய்த விமானம் திருச்சி சென்று விட்டது. எனினும் சென்னை, திருச்சி விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. வெடிகுண்டு இல்லை, வெறும் புரளி என்பது தெரிந்தது.

மர்ம ஆசாமி எங்கிருந்து பேசினான் என்று போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அப்போது ராயபுரத்தை சேர்ந்த ஒருவருடைய போனில் இருந்து பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு போலீசார் விரைந்தனர். ஆனால், அவர் பூந்தமல்லி சென்றது தெரிந்தது. இதையடுத்து அந்த நம்பரில் இருந்து யாருக்கெல்லாம் பேசப்பட்டது என்பது பற்றிய முழு விவரங்களை போலீசார் சேகரித்தனர். இதில் செல்போன் நம்பர், ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமானது என தெரிந்தது. இதையடுத்து அவரை நேற்றிரவு பூந்தமல்லியில் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு அவரது மாமியாரிடம் செல்போனை ரவிச்சந்திரன் கொடுத்துள்ளார். அவர் இறந்து விட்டதால், அந்த செல்போனை அவரது பெரியப்பா மகன் பாபு பயன்படுத்தி வந்துள்ளார். அவரும் அந்த செல்போனை தொலைத்து விட்டார் என்று தகவல் கிடைத்தது. தொடர்ந்து விசாரணை நடத்தியபோது, ஜெயக்குமார் என்பவர் அந்த செல்போனை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. அவரையும் பூந்தமல்லியில் போலீசார் பிடித்தனர். ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடக்கிறது.

No comments:

Post a Comment