மேற்கு நாடுகளில் இருக்கும் சில எல்.ரி.ரி.ஈ.யினர் அந்நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்கள்: இலங்கைக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எழுப்பி தமிழ்க் கூட்டமைப்பை ஆட்டிப்படைக்கிறார்கள்-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!
Friday, December,30, 2011இலங்கை::மேற்கு நாடுகளில் இருக்கும் சில எல்.ரி.ரி.ஈ.யினர் அந்நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்கள் மீது அழுத்தங்களை கொண்டுவந்து இலங்கைக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர்.
மேற்கத்திய நாடுகள் எப்போதும் காஷ்மீரையும் இலங்கை நிலவரத்தையும் பற்றி அந்நாடுகளின் பாராளுமன்றத்தில் ஆட்சேபக் குரல் எழுப்புகின்ற போதிலும், அவை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஈராக்கில் மேற்கத்திய வல்லரசு நாடுகளினால் மேற்கொள்ளப்படும் அக்கிரமங்கள் பற்றி வாய்திறந்து பேசாமல், மெளனம் சாதிக்கின்றனவென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து வெளிவரும் டெக்கான் குரோனிக்கல் ஆங்கில பத்திரிகைக்கு ஜனாதிபதி வழங்கிய பேட்டியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். 30 ஆண்டு கால இனப்பிரச்சினை தொடர்புடைய யுத்தத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் தோற்கடித்து, எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தை துவம்சம் செய்தார்.
இந்தப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்த வேண்டிய சாதகமான சூழ்நிலை இன்று நாட்டில் உருவாகியிருக்கின்றது. இப்பேட்டியில் ஜனாதிபதி தமது நாடு இந்தியா, சீனாவுடன் கொண்டுள்ள நல்லுறவை பற்றியும் தமிழர் பிரச்சினையை தீர்த்துவைப்பதில் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் விளக்கிக் கூறினார்.
30 ஆண்டுகால இனப்பிரச்சினை தொடர்புடைய யுத்தத்தில் பயங்கரவாதிகளை தோற்கடித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண இன்று நாட்டில் சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளதென்பதை எடுத்துரைத்துள்ளார். இலங்கை, இந்திய, சீனாவுடன் கொண்டுள்ள நல்லுறவு பற்றியும் தமிழர் பிரச்சினையை தீர்த்துவைப்பதில் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் அவர் இப்பேட்டியில் விளக்கிக் கூறியுள்ளார்.
1880ம் ஆண்டில் ஊவா மாகாணத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சியின் போது அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அப்போதிருந்த 14வயதிற்கும் மேற்பட்ட சகல ஆண்களையும் கொலை செய்து, அந்த மக்களை பட்டினி போடும் எண்ணத்துடன் அப்பிரதேசத்தில் உள்ள நீர்வளங்களை உடைத்து சின்னாபின்னப் படுத்தினர்.
அவர்கள் எங்கள் மக்களின் காணிகளை கொள்ளையடித்தனர். இது போன்று பிரிட்டிஷார் இந்தியாவிலும் கொடுமைகளை புரிந்தனர். இவர்கள் இன்று எங்கள் இருநாடுகளைப் பார்த்து மனித உரிமைகளைப் பற்றி விமர்சிக்கிறார்கள். மேற்கு நாடுகள், என்னை தங்களின் கைப்பொம்மையாக வைக்க முயற்சிக்கின்றனர். அதற்கு நான் இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி கூறினார்.
நான் இந்தியாவிற்கே முதலிடம் கொடுக்கிறேன். இந்தியாவுக்கு அடுத்தபடியாகவே மற்றைய நாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன். அதிகார பீடத்தில் நான் அமர்ந்தவுடன் இந்தியாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டு அவர்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டேன். நான் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம், ஐக்கிய ராஜதானி மற்றும் அமெரிக்காவைப் பற்றி கவலைப்படவில்லை.
ஆயினும், அமெரிக்காவிடம் இருந்து ஆழ்கடலில் உள்ள எல்.ரி.ரி.ஈ. கப்பல்களின் நடமாட்டத்தைப் பற்றிய தகவல்களை பெற்றுக் கொண்டோம். அதன் மூலமே எல்.ரி.ரி.ஈ.யை ஆழ்கடலில் தோற்கடிக்க முடிந்தது என்றும் ஜனாதிபதி தமது பேட்டியில் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தனது பேட்டியில் மேலும் கூறுகையில், சீனா, இலங்கைக்கு பாரிய உட்கட்டமைப்பு திட்டங்களை கொண்டு வந்திருக்கிறது. நாம் சீனாவுக்கு பெற்றுக் கொடுத்த ஒவ்வொரு அபிவிருத்தித் திட்டத்தையும் முதலில் இந்தியாவிற்கே கொடுக்க முன்வந்தோம் என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதில் ஹம்பாந்தோட்டையில் உள்ள பாரிய அபிவிருத்தி திட்டமும் ஒன்றாகும்.
ஆயினும், இந்த விருப்பத்திற்கு இந்தியாவிடம் இருந்து எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை. கொழும்பு துறைமுக விஸ்தரிப்பு திட்டத்தையும் நாம் விளம்பரப்படுத்தினோம். ஆயினும் சீனா மாத்திரமே இதனை ஏற்றுக் கொள்ள முன்வந்தது என்றும் கூறினார்.
வட பகுதியில் தேர்தல்கள் பற்றி கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, இந்தத் தேர்தல்களில் விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிராகவும் பெருமளவு வாக்குகள் பதிவு செய்யப்பட்டன. 54 சதவீதமான தமிழர்கள் வடக்கு, கிழக்குக்கு வெளியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். யாழ்ப்பாணத்து கூட்டு வர்த்தக சம்மேளனம் தன்னுடைய கருத்தை கொண்டிருப்பதற்கான பூரண உரிமையை பெற்றிருக்கிறது.
ஆயினும், வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் வடபகுதியில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். நாம் நிலையான அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதில் அதிக ஆர்வத்துடன் இருக்கிறோம். இத்தகைய அரசியல் தீர்வு யுத்தம் முடிவடைந்துள்ள இன்றைய சூழ்நிலையில் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வாக அமைவது அவசியம் என்று கூறினார்.
அதிகாரப் பரவலாக்கல் பற்றி கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, அதிகாரப்பரவலாக்கல் நோக்குடன் நாம் ஏற்கனவே சகல வட மாகாணத்தை தவிர சகல மாகாணங்களிலும் மாகாண சபைகளை தேர்ந்தெடுத்துள்ளோம்.
வடக்கிலும் விரைவில் மாகாணசபை தேர்தல் நடத்தப்படும். எவ்விதம் மாகாண நிர்வாகத்தை பலப்படுத்தி அதன் மூலம் பாரிய அடிப்படையில் பொருளாதாரத்தையும், அபிவிருத்தியையும் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் நாம் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும். இவ்விதம் ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளில் சகல சமூகங்கள் மற்றும் அரசியல் குழுக்களும் பொருளாதார ரீதியில் உதவி செய்யும் அமைப்புகளும் கலந்து கொள்வதும் நல்லது என்று யோசனை தெரிவித்தார்.
பாராளுமன்ற தெரிவுக்குழு பற்றி கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, பின்வரும் கருத்துக்களை வெளியிட்டார்.
ஒரு ஜனநாயக நாட்டில் ஏதாவது ஒரு அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டுமாயின் இறுதியில் அந்தத் தீர்வு பாராளுமன்றத்தில் அங்கீகாரத்தைப் பெற்றாக வேண்டும். அதன் அடிப்படையில் தான் இந்தப் பிரச்சினையை தீர்த்து வைக்க முடியுமென நான் கருதுகின்றேன். ஆயினும் துரதிஷ்டவசமாக பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தங்கள் பிரதிநிதிகளை முன்மொழியவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு எல்.ரி.ரி.ஈ.யைப் போலவே செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் நிறைவேற்ற முடியாத விடயங்களைக் கேட்கிறார்கள். வடக்கையும் கிழக்கையும் இணையுங்கள், காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் என்றெல்லாம் கேட்கிறார்கள். உங்கள் நாட்டில் ராகுல் காந்தி உத்திர பிரதேசத்திற்கு சென்ற போது என்ன நடந்தது என்று சற்று திரும்பி பாருங்கள். அம்மாநிலத்தின் முதலமைச்சர் மாயாவதி ராகுல் காந்தியை கைது செய்ய எத்தணித்தார்.
நானும் இவர்களால் கைது செய்யப்படுவதற்கு விரும்புவேன் என்று நினைக்கிaர்களா? (தமிழர்களுக்கு என ஒரு பொலிஸ் படையை அமைத்துக் கொடுப்பதன் மூலம்) வெளிநாட்டில் புலம்பெயர்ந்துள்ள தமிழர்களே தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஆட்டிப்படைக்கிறார்கள். அவர்களுக்கு சமாதானமோ, அரசியல் தீர்வோ அவசியமில்லை. இலங்கையில் சமாதானமும் அரசியல் தீர்வும் ஏற்பட்டால் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடுகள் அவர்களை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பிவிடும் என்று அஞ்சுகிறார்கள்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எல்.ரி.ரி.ஈ.யையும் அதே பிரிவினைவாதக் கொள்கையையும் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது. அத்தகைய நிலைப்பாட்டை இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நான் ஒரு தீர்வுக்காக செயற்பட விரும்புகிறேன். ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்னுடன் ஒத்துழைக்க முன்வரவில்லை’ எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment