Tuesday, December 13, 2011

யாழ் குடாநாட்டில் தொடரும் கொள்ளைச் சம்பவங்களை தடுக்க சிவில் அமைப்புக்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டும்-டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, December 13, 2011
இலங்கை::யாழ் குடாநாட்டில் தொடரும் கொள்ளைச் சம்பவங்களை தடுக்க சிவில் அமைப்புக்கள் மற்றும் பாதுகாப்பு தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டும் என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

குடாநாட்டில் தொடரும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

குடாநாட்டில் தொடரும் கொள்ளைச் சம்பவங்கள் வடக்கு மக்களின் உற்பத்தி மற்றும் வர்த்தக முயற்சிகளை நீண்ட காலத்திற்கு பின் தள்ளிவிடும் துரதிஷ்ட நிகழ்வுகளாகும்.

கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ள விதம் பற்றிய அவதானிப்பில் இச் செயலில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்ட வர்த்தக நிலையத்திற்குள் புகுந்து பல மணிநேரம் தங்கியிருந்து வேண்டிய பெறுமதியான பொருட்களை ஆராய்ந்து கொள்ளையிட்டுச் சென்றிருப்பதை அறியக் கூடியதாகவுள்ளது.

மக்கள் நெருக்கமாக வதியும் நகர் சார்ந்த பகுதிக் கடைகளில் இவ்விதம் கொள்ளைகள் நிகழ்ந்திருப்பது மிகப் பெரும் விலை கொடுத்து மீளப்பெற்றுக் கொண்ட நிரந்தர அமைதிச் சூழலின் மீது எமது மக்களுக்கு அவநம்பிக்கையினை ஏற்படுத்தும் நிகழ்வுகளாகும்.

ஒரே இரவில் திருநெல்வேலி சந்தைப் பகுயில் 8 வர்த்தக நிலையங்களிலும் அவ்வாறே வடமராட்சி நெல்லியடியில் 4 வர்த்தக நிலையங்களிலும் பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருக்கின்றன.

இவ்வாறான சம்பவங்களின் உடனடி விளைவாக உற்பத்தி சார்ந்த பாரிய முதலீடுகள் மீது குடாநாட்டு மக்கள் நம்பிக்கை இழக்கும் அபாயமிருப்பதையும் இங்கு நாம் வருத்தத்துடன் சுட்டிக் காட்ட வேண்யுள்ளது.

போருக்கு முற்பட்ட காலங்கள் போலன்றி தற்போது சிறிய தொழில்சார் முதலீடுகளுக்கும் பெரும் தொகை நிதி தேவைப்படும் நிலையில் இவற்றை வங்கிகளிடமோ அன்றி தனியாரிடமிருந்தோ கடன்; பெற்றே தற்போதைய வர்த்தக நடவடிக்கைகளையும் கூட முன்னெடுக்க வேண்டிய நிலையில் இன்று குடாநாட்டு மக்கள் உள்ளனர்.

சுயாதீனமான வர்த்தக முதலீடுகள் மீது இக் கொள்ளைச் சம்பவங்கள் இன்று ஏற்படுத்தியிருக்கும் இப்பாதிப்பானது எதிர்காலத்தில் சுதந்திரமான திறந்த போட்டி அடிப்படையிலான வர்த்தக முதலீடுகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தி அது குடாநாட்டுக்கும் வெளிமாவட்டங்களுக்குமிடையிலான பொருட்கள் சேவைகள் விநியோகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என நாம் எதிர்பார்க்கலாம்.

எனவே குடாநாட்டு முதலீட்டாளர்களும் வர்த்தகர்களும் பாதுகாப்பான அச்சமற்ற சூழ்நிலையில் தமது உற்பத்தி மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க உதவியாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் கண்ணியமான கடமை உணர்வுடன் செயற்பட்டு உதவ முன்வர வேண்டும் எனவும் மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment