

Friday, December,30, 2011சென்னை::புதுச்சேரி அருகே இன்று காலை ஆக்ரோஷமாக கரையை கடந்தது ‘தானே’ புயல். புயலின் கோர தாண்டவத்தால் கடலூர், புதுச்சேரி முற்றிலும் முடங்கிப் போனது. ஈசிஆர் உள்பட பல சாலைகள் துண்டிக்கப்பட்டதால் பஸ், ரயில் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. சென்னை மெரினாவில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள், சூறாவளி காற்றால் பறந்தன. மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் கடந்த 23-ம் தேதி உருவான குறைந்த காற்றழுத்தம், மெல்ல மெல்ல வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘தானே’ என பெயரிடப்பட்டது. புயல் தீவிரமடைந்து, சென்னையை நோக்கி வேகமாக நகர்ந்தது. நேற்று நள்ளிரவு சென்னையின் கிழக்கு தென்கிழக்கே 150 கி.மீ., தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 180 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டிருந்தது. இன்று அதிகாலை 5 மணிக்கு புதுச்சேரி அருகே 50 கி.மீ. தூரத்தில் புயல் நிலை கொண்டது. அப்போது புதுச்சேரி, கடலூரின் கடலோர பகுதிகளில் 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோர பகுதியில் 95 கிமீ வேகத்தில் காற்று வீசியது. பரவலாக மழையும் பெய்து வருகிறது.
புதுச்சேரியை புயல் நெருங்கியதும், உடனடியாக கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காற்றின் போக்கு சாதகமாக இல்லாததால், புயல் கடலிலேயே நிலை கொண்டிருந்தது. காலை 6.30 மணிக்கு கடலூர் - புதுச்சேரி இடையே புயல் மெல்ல கரையை கடக்க தொடங்கியது. அந்த நேரத்தில் 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. புயல் கரையை கடக்க 1 மணி நேரம் ஆனது. காலை 7.30 மணிக்கு முழுமையாக கரையை கடந்த புயல், வலுவிழந்து மேற்கு நோக்கி நகர்ந்தது. ‘தானே’ புயலின் கோர தாண்டவத்தால் புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பலத்த மழையால் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டன. ஈசிஆரில் பலத்த சூறைக்காற்று வீசியதால் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன. புயலால் புதுச்சேரி மாநிலமே நிலைகுலைந்துவிட்டது. அங்கு வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கடலூர் தேவனாம்பட்டினத்தில் மீனவ குடியிருப்புகளில் கடல் நீர் புகுந்துள்ளது. கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டுள்ளன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை மற்றும் காசிமேடு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் காற்றில் பறந்தன. கன மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் மின் சப்ளை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றம் காரணமாக எண்ணூரில் நேற்று நள்ளிரவில் கடற்கரையோர கிராமங்களில் நீர் புகுந்தது. ராட்சத அலையால் மக்கள் பீதியடைந்தனர். அந்த பகுதியை சேர்ந்த 2 ஆயிரம் பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். சூறைக்காற்று காரணமாக சென்னையில் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்கள் 10 மணி நேரம் தாமதமாக சென்னை வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல உள்நாட்டு விமானங்களும் 2 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகின்றன.
புயல் மழைக்கு சென்னையில் ஒருவரும், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் தலா 2 பேர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கடலோர பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. பல ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர பகுதிகளில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு விட்டனர். இதனால், பெரிய அளவில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.
தானே’ புயல் காரணமாக வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 110 மிமீ, கடலூரில் 90 மிமீ, சென்னையில் 60 மிமீ மழை பெய்துள்ளது. புயல் கரை கடந்தாலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு பலத்த காற்றும் கன மழையும் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளும் வீராணம் உள்ளிட்ட பல ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இதையடுத்து அனைத்து ஏரிகளையும் பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்ட மீனவர்கள் 25 பேர் மாயம்!
தஞ்சை::தானே’ புயல் காரணமாக தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கடந்த 4 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதனால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அவர்களின் படகுகளும் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் எச்சரிக்கையை மீறி கடலுக்கு சென்ற தஞ்சை மீனவர்கள் 25 பேர் மாயமாகினர்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மல்லிபட்டினம் பகுதியை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 25 பேர் மாயமானார்கள். கார்த்திகேயன், ரங்கராஜன், பழனியாண்டி, நாகராஜன், முருகன் ஆகியோர்களுக்கு சொந்தமான நாட்டுப்படகுகளில் 25 மீனவர்கள் கடந்த 27-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் இன்று வரை கரை திரும்பவில்லை. அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வராததால் அந்த 25 மீனவர்களின் குடும்பத்தினர் பதட்டம் அடைந்து உள்ளனர். இதுபற்றி கடலோர பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. புயலால் ஏற்பட்டுள்ள கடல் சீற்றம் காரணமாக பலத்த காற்று வீசுவதால் மீட்பு பணியில், கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் மீனவர்களால் ஈடுபட முடியவில்லை.
No comments:
Post a Comment