Saturday, December 10, 2011

புதிய அணை கட்ட கேரள சட்டசபை தீர்மானம் தமிழகத்தில் மீண்டும் கொந்தளிப்பு!

Saturday, December
கம்பம்::முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் தமிழகத்தில் மீண்டும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் பல இடங்களில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இன்று காலை அணையை முற்றுகையிட 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் திடீரென புறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வீரபாண்டி அருகே கேரள பிரமுகருக்கு சொந்தமான பால்பண்ணையை இளைஞர்கள் அடித்து நொறுக்கினர். தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் இடையே முல்லை பெரியாறு அணை பிரச்னை முற்றி வருகிறது. இந்நிலையில், பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என்று கூறி கேரளாவில் சிலர் திடீர் வன்முறையில் ஈடுபட்டனர். தமிழர்கள் பலர் தாக்கப்பட்டனர். ஐயப்ப பக்தர்கள் அவமதிக்கப்பட்டனர். பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர். இதைக் கண்டித்து தமிழகத்திலும் போராட்டங்கள் வெடித்தன. இங்குள்ள கேரள மாநிலத்தவர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் தமிழகம் - கேரளா இடையே 6 நாட்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

அசம்பாவிதங்களை தடுக்க தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குமுளி, கம்பம், போடி வழியாக கேரளாவுக்கு காய்கறி, பழங்கள், பால், இறைச்சி என எந்த பொருளும் கொண்டு செல்லப்படவில்லை. இதனால் அங்கு உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. போராட்டங்கள் சற்று ஓய்ந்திருந்த நிலையில், தேனி கலெக்டர் பழனிச்சாமி தலைமையில் கம்பத்தில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. இதில் போராட்டத்தை கைவிடுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், Ôஇடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க வேண்டும். பெரியாறு அணையை மலையாளிகள் உடைத்தால் இடுக்கி அணையை நாங்கள் உடைப்போம். முடிவு தெரியும்வரை போராட்டத்தை கைவிட முடியாதுÕ என்று அனைத்து கட்சி பிரதிநிதிகளும் ஒரே குரலில் தெரிவித்தனர். இதனால் கலெக்டர் கூட்டிய கூட்டம் தோல்வியில் முடிந்தது.

இதற்கிடையே, கேரள சட்டசபையில் சிறப்பு கூட்டம் நேற்று கூடியது. இதில், பெரியாறு அணை நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும். புதிய அணை கட்டியே தீருவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் தமிழகத்தில் மீண்டும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. கம்பம், கூடலூர் பகுதியில் பலர் போராட்டத்தில் குதித்துள்ளனர். கூடலூரை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமானோர் அணையை மீட்போம் என்ற கோஷத்துடன் புறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குமுளி அருகே அவர்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர். கூடலூரில் பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மரங்களை வெட்டி கேரள சாலைகளில் தடைகள் ஏற்படுத்தினர். 20-க்கும் அதிகமான இடங்களில் உம்மன்சாண்டி உருவபொம்மை எரிக்கப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. தேனி மட்டுமின்றி மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் வக்கீல்கள், வணிகர்கள் சங்கத்தினர், டாக்சி டிரைவர்கள், காய்கறி கமிஷன் கடைகள் என அனைத்து தரப்பினரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே வயல்பட்டியில் கேரள பிரமுகர்கள் சிலர் Ôமலநாடு பார்மர்ஸ் சொசைட்டிÕ என்ற பெயரில் பால் குளிரூட்டும் நிலையம் நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலை 5 மணிக்கு 20 ஆட்டோக்களில் வாலிபர்கள், பால்பண்ணைக்கு சென்றனர். கேன்களில் பாலை நிரப்பி வேனில் ஏற்றிக் கொண்டிருந்தவர்களை தடுத்து, Ôதமிழர்களின் பால் மட்டும் மலையாளிகளுக்கு தேவை, தண்ணீர் மட்டும் தர முடியாதாÕ என்று கூறி பால்வண்டி மற்றும் கேன்களை அடித்து நொறுக்கினர். பாலை சாலையில் கொட்டினர். குளிரூட்டும் மையத்தில் இருந்த இயந்திரங்களையும் அடித்து நொறுக்கினர். கேரள மாநிலத்தவர் தங்கியிருந்த அறைகளையும் சூறையாடினர். உம்மன்சாண்டிக்கு எதிராக கோஷமிட்டபடி சென்றுவிட்டனர். இதையடுத்து தேனியில் உள்ள கேரள மாநிலத்தவர்களுக்கு சொந்தமான ஓட்டல்கள், முத்தூட், கொசமற்றம் உள்ளிட்ட நிதிநிறுவனங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தேனி, பெரியகுளம், போடி, பாளையம் பகுதி வக்கீல்கள் இன்று தேனியில் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் நூற்றுக்கணக்கான வக்கீல்கள் கலந்து கொண்டனர். தேனி சுமைதூக்கும் தொழிலாளர்களும் கூலி தொழிலாளர்களும் அணையை பாதுகாக்க வலியுறுத்தி இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 9 மணிக்கு உத்தமபாளையம் அருகே உள்ள சுருளிப்பட்டி கிராம மக்கள் மற்றும் திராட்சை தோட்ட தொழிலாளர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் திரண்டு, திடீரென உம்மன்சாண்டி உருவபொம்மையை எரித்தனர். பின்னர், அவர்கள் அணையை முற்றுகையிட குமுளி நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். தகவல் கிடைத்து வந்த போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ‘அணையை நாங்கள் பாதுகாத்து கொள்கிறோம்Õ என்று கூறிவிட்டு எல்லாரும் குமுளி நோக்கி செல்ல முயன்றனர். அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திடீரென சாலையில் படுத்து உருண்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர் போராட்டங்களால் தேனி மாவட்டம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.

தமிழக சட்டசபை கூடுமா?

முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்கவும், புதிய அணை கட்டவும் கேரள சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதேபோல் தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்டி அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும். இடுக்கி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றுமாறு அரசுக்கு கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக மக்களின் கண்டனத்தை மத்திய மற்றும் கேரள அரசுகளுக்கு தெரிவிக்கும் வகையில், முதல்வர் ஜெயலலிதா இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள் ளனர். தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்ட அனைத்து கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment