Saturday, December 24, 2011

முல்லைப் பெரியாறு பிரச்னை சென்னை வரும் பிரதமரிடம் கருணாநிதி நேரில் மனு!

Saturday, December 24, 2011
சென்னை : முல்லை பெரியாறு பிரச்னை தொடர்பாக நாளை மறுநாள் சென்னை வரும் பிரதமரிடம் திமுக சார்பில் கோரிக்கை மனு அளிப்பது என கருணாநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயம், முரசொலிமாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் திமுக தலைவர் கருணாநிதி தேனி மா வட்ட நிர்வாகிகளுடன் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்.

அப்போது, தேனியில் நிலவி வரும் பிரச்னை குறித்தும்& முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் திமுக சார்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும், கேரள எல்லைப் பகுதியில் நடைபெறும் கலவரங்கள் குறி த்தும், அப்பகுதி மக்கள் மீது தமிழக காவல்துறையினர் நடத்திய தாக்குதல்கள் குறித்தும், தேனி மாவட்ட நிர்வாகிகள், கருணாநிதியிடம் விவரித்தனர். நாளை மறுநாள் (26ம்தேதி) பிரதமர் மன்மோகன் சிங் சென்னை வருகிறார்.

அப்போது, கேரள எல்லைப் பகுதிகளில் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுப்பதற்கு மத்திய அரசு காலதாமதம் செய்யாமல், விரைந்து நடவடிக்கை மேற்கொள்வதுடன், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி முல்லைப் பெரியாறு அணை நீரின் அளவை 142 அடியாக உயர்த்துவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்று திமுக சார்பில் கருணாநிதியும் & பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனும் மற்றும் தேனி மாவட்ட நிர்வாகிகள் பிரதமரிடம் கோரிக்கை மனு அளிப்பதென முடிவெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு நா.வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன், தேனி மாவட்டக் கழகச் செயலாளர் எல்.மூக்கையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment