Thursday, December 8, 2011

மன்னார் மீனவர்களின் கவனயீர்ப்பு பேரணியும் முற்றுகைப்போராட்டம் ஒன்றும் இடம்பெற்றிருக்கின்றது!

Thursday,December,08,2011
இலங்கை: மன்னாரில் மீனவர்களின் கடல்தொழில் முயற்சிக்கு தொடர்ந்தும் இடையூறு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் அதனை நிவர்த்தி செய்து சீரான மீன்பிடிக்கு உதவுமாறும் தெரிவித்து கவனயீர்ப்பு பேரணியும் முற்றுகைப்போராட்டம் ஒன்றும் இடம்பெற்றிருக்கின்றது.

மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்டிருக்கும் மீனவர்களின் அமைதிப்பேரணிக்கு உரிய தீர்வு பெற்றுத்தரப்பட வேண்டும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமது ஜீவனோபாயமான தொழில் முயற்சிக்கு அடிக்கடி விதிக்கப்பட்டு வரும் தடைகளும் புதிய அணுமதிப்பத்திர நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டு சுயாதீனமான கடல்தொழில் முயற்சிக்கு வழிவிட வேண்டும் என்பதை வழியறுத்தியே இப்பேரணி இடம்பெற்றிருக்கின்றது.

மன்னார் நகரில் அமைந்திருக்கும் மீன் விற்பனைச் சந்தைப்பகுதியில் இன்று (08.12.2011) காலை ஒன்று கூடிய மீனவர்கள் தமது ஒருசில கோரிக்கைகளை முன்வைத்து சுலோகங்களை ஏந்தியவாறு மேற்படி அமைதிப்பேரணியினை நடாத்தியிருக்கின்றனர்.

மன்னார் நகரம், பள்ளிமுனை மற்றும் பனங்கட்டு கொட்டு மீனவர்கள் மேற்கொண்டு வரும் கடற்றொழில் முயற்சிகளான கடலுக்கடியில் சங்கு மற்றும் அட்டை எடுத்தல், போன்றவற்றிற்கு கடற்றொழில் திணைக்களம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

ஆயினும் கடந்த கார்த்திகை மாதம் 17ம் திகதி இது போன்ற மாபெரும் அமைதிப்பேரணி ஒன்றினை நடாத்தி மன்னார் மாவட் செயலகத்தில் ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றினை மாவட்ட உதவி அரசாங்க அதிபரிடம் கையளித்திருந்தனர்.

மேற் குறித்த மகஜரில் தமது ஜீவனோபாயமான கடற்றொழில் முயற்சிகள் சிலவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆயினும் வெளிமாவட்ட மீனவர்கள் அதனை எவ்வித தடைகளும் இன்றி முன்னெடுத்து வருவதாகவும் அதனால் தமக்கும் அவ்வணுமதியினை வழங்க வேண்டும் என அம் மகஜரில் தெரிவித்திருந்தனர்.
மீனவர்களின் மேற் குறித்த கோரிக்கைகள் தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்திய மன்னார் மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட அரசாங்க அதிபர் ஜே.ஏ. சரத் ரவின்திர அன்று மாலை மீனவர்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்றினையும் நடாத்தியிருந்தார்.

மேற்குறித்த கலந்துரையாடலில் அதிமேதகு மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை, மன்னார் மாவட்ட கடற்றொழில் பணிப்பாளர் மிராண்டா மற்றும் மீனவர்களின்; பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்த நிலையில் மீனவர்களின் கோரிக்கைக்கு அமையவும், குறித்த தொழில் முயற்சிக்கான அனுமதி அமைச்சு மட்டத்தில் இருந்து கிடைக்கப்பெற்றிருப்பதாக அரசாங்க அதிபர் தெரிவித்திருந்தார்.

ஆயினும் ஒரு மாத காலம் ஆவதற்கு முன்பே மீண்டும் மீனவர்கள் கடற்படையினரின் அனுமதியினைப்பெற்றே கடலுக்குச்செல்ல வேண்டியிருப்பதாகவும், நீரிற்கடியில் சுழியோட்டம் செய்வதற்கு மேலதிகமான அனுமதியினைப்பெற வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றனது.

மன்னார் சுற்று வட்டம் ஊடாக செபஸ்தியார் பேராலய வீதி, வைத்திய சாலை வீதி, மன்னார் தலைமன்னார் பிரதான வீதி வழியாக மாவட்ட செயலகத்தை பேரணி அடைந்திருக்கின்றது.

பேரணியாக சென்றவர்கள் பாஸ் நடைமுறை இனி வேண்டாம், விடுவிடு எம்மை சுதந்திரமாக கடலில் தொழில் செய்ய விடு, எமது வளத்தை இந்திய இழுவைப்படகுகள் சுரண்டவதை அணுமதியாதே, நிவாரணங்கள் ஊடாக மீனவர்களை ஏமாற்ற வேண்டாம், மற்றும் சிலிண்டர் தொழிலை முற்றாக நீக்கு எனும் பல வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை தாங்கியிருந்தனர்.

மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்ட மீனவர்கள் ஜனாதிபதிக்கான மகஜரினை மேலதிக அரசாங்க அதிபர் திருமதி எஸ். மோகநாதனிடம் கையளித்ததோடு சம்மந்தப்பட்டவர்களிடமிருந்து உடனடியானதும் தீர்க்கமானதுமான பதிலை பெற்றுத்தருமாறும் கோஷங்களை எழுப்பியிருக்கின்றனர்.

மன்னார் மீனவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கு மன்னார் வர்த்தக சங்கம் தமது கடைகள,; வர்த்தக நிலையங்கள,; வியாபாரஸ்தலங்களை மூடி தமது ஆதரவினை தெரிவித்திருக்கும் நிலையில் மன்னார் நகர சபையின் அங்கத்தவர்களும் பேரணியில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

No comments:

Post a Comment