Tuesday, December,27, 2011கன்னியாகுமரி, -கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் பகுதியில் இன்று காலை சூரிய உதயம் காண சுமார் 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரியில் சீசன் தொடங்கியதில் இருந்து நாள்தோறும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. தற்போது கிறிஸ்மஸ் விடுமுறையை கழிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் கன்னியாகுமரி வருகின்றனர். இன்று காலை சுமார் 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் சூரிய உதயம் பார்ப்பதற்காக திரிவேணி சங்கமத்தில் திரண்டிருந்தனர். ஆனால் வானம் மேகமூட்டமுடன் காணப்பட்டதால் சூரிய உதயம் தெரியவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
பின்னர் பகவதி அம்மன் கோவிலுக்குச் செல்வதற்காக பலர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கடற்கரை சாலை, காந்திமண்டபம், திரிவேணி சங்கமம், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக வாயில் என எங்கு பார்த்தாலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. தங்கும் விடுதிகளில் இடம் கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் கொண்டு வந்திருந்த லக்கேஜுடன் சாலைகளின் ஓரத்தில் குடும்பத்துடன் நின்று கொண்டிருந்ததை காண முடிந்தது. உணவகங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் காலை உணவு சாப்பிடுவதற்காக சுற்றுலாப் பயணிகள் காத்துக் கிடந்தனர். பல இடங்களில் வாகன நெரிசலும் ஏற்பட்டது.
No comments:
Post a Comment