Tuesday, December 13, 2011

தம்புள்ளையில் நிலவும் அமைதியின்மை தொடர்பில் 28 பேர் கைது

Tuesday, December 13, 2011
இலங்கை::தம்புள்ளையில் நிலவும் அமைதியின்மை தொடர்பில் 28 பேர் கைது
இன்று பிற்பகல் தம்புள்ளையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அமைதியின்மையைத் தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்ட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் பொலிஸ் அதிகாரிகள் உள்ளடங்களாக சிலர் காயமடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறினார்.

மது போதையுடன் இருந்த சிலரே தம்புள்ளை நகரில் அமைதியின்மையை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அமைதியின்மையின் போது பொலிஸாரின் இரண்டு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் காரணமாக குருநாகல், மாத்தளை, ஹபரண ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து தடைப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதனால் அந்தப் பகுதிகளுக்குச் செல்லவிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அசௌகரியத்தை எதிர்நோக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கலைந்து செல்லுமாறு ஆர்ப்பாட்டக்கரார்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தலை அவர்கள் பெருட்படுத்தாததன் காரணத்தால் அவர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ள நேரிட்டதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

தற்போது பிரதேசத்தின் நிலைமை வழமைக்குத் திரும்புவதாகவும் அவர் கூறினார்.

பொலிஸார் தொடர்ந்தும் பிரதேசத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment