Friday, December 09, 2011கொல்கத்தா:கொல்கத்தாவில் ஏ.எம்.ஆர்.ஐ. என்ற மிகப்பெரிய தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இது 7 மாடி கட்டிடத்தில் இயங்குகிறது. இங்கு தரை தளத்தில் கார் பார்க்கிங் மற்றும் வரவேற்பரையும் முதல் மாடியில் அவசர சிகிச்சை பிரிவும் செயல்படுகிறது. அடுத்தடுத்த மாடிகளில் தனித்தனி சிகிச்சை பிரிவுகள், உள்நோயாளிகள் பிரிவும் உள்ளது.
இன்று அதிகாலை 3.30 மணிக்கு திடீர் என்று இங்கு தீ விபத்து ஏற்பட்டது. அப்போது நோயாளிகள் அவர்களை கவனித்து வந்த உறவினர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தனர். திடீர் என்று கரும்புகை வார்டுகளை சூழ்ந்தது. தொடர்ந்து தீ பயங்கர ஜூவாலையுடன் எரிந்தது. உடனே நோயாளிகள், உறவினர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள் அலறியடித்து ஓடினார்கள்.
ஆனால் தீ நாலா புறமும் சுற்றி வளைத்து எரிந்ததால் அவர்களால் தப்பிக்க முடியவில்லை. தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் 30 நிமிடம் தாமதமாகத்தான் அங்கு வரமுடிந்தது. இதற்குள் அருகில் வசிப்பவர்களும், ஆஸ்பத்திரி ஊழியர்களும் ஜன்னல்களை உடைத்து உள்ளே சிக்கி இருந்த நோயாளிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதன் பிறகு 25 வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். மாடிகளில் பற்றி எரிந்த தீயை கிரேன் பொருத்தப்பட்ட ஏணிகளில் ஏறி அணைத்தனர். 5 மணி நேர போராட்டத்துக்குப்பின் தீ கட்டுப்படுத்தப்பட்டது. அதன் பிறகு தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்றனர். அங்கு ஏராளமான உடல்கள் கருகி கிடந்தன. 20 நோயாளிகள் தீயில் பலியாகி விட்டதாக மேற்கு வங்காள அரசு அறிவித்துள்ளது.
50-க்கும் மேற்பட்டவர்களில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு எஸ்.எஸ். கே.எம். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் நோயாளிகளின் உறவினர்கள் பதறியடித்து ஓடிவந்தனர். அந்தப் பகுதி மக்களும் திரண்டனர். தீ விபத்தில் சிக்கியவர்கள் பற்றி தகவல் கேட்டு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அந்தப் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மக்கள் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது. ஆஸ்பத்திரி கட்டிடத்துக்குள் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அருகில் யாரையும் நெருங்கவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். காயத்துடன் மீட்கப்பட்ட பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. ஆஸ்பத்திரிக்குள் எரிந்து கரிக்கட்டையாக இருந்த உடல்களை போலீசார் மூட்டையாக கட்டி எடுத்து வந்தனர். சில உடல்கள் உருத்தெரியாமல் இருந்ததால் உறவினர்கள் அடையாளம் காண முடியாமல் தவித்தனர்.
காயம் அடைந்தவர்கள், மீட்கப்பட்டவர்கள் விவரமும், அறிய முடியவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு தாக்கினார்கள். போலீஸ் தடுப்பை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். 20 உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டன. மேலும் பல உடல்கள் உள்ளே இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் முதல்- மந்திரி மம்தா பானர்ஜி காலை 10 மணிக்கு சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
மீட்கப்பட்ட நோயாளிகளுக்கும், உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார். தீ விபத்து ஏற்பட்டது குறித்து அதி காரிகளிடம் கேட்டு அறிந் தார். ஆஸ்பத்திரி தரை தளத்தில் கார் பார்க்கிங் உள்ள இடத்தில் மருத்துவ உபகரணங்களையும், உபயோகமற்ற பொருட்களையும், சேமித்து வைத்து இருந்தனர். இந்த இடத்தில் இருந்து தீப்பிடித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment