Sunday, December 11, 2011

முல்லைப் பெரியாறு குறித்து விவாதிக்க டிச 15ம் தேதி தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம்-ஜெ. அறிவிப்பு!

Sunday, December 11, 2011
சென்னை::முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக டிசம்பர் 15ம் தேதி தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் நடைபெறும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தற்போது உச்சநீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் உள்ள நியாயத்தை உச்சநீதிமன்றம் ஏற்பதன் மூலமே தீர்வு காண முடியும்.

தமிழக மக்கள் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உணர்ச்சிகளைத் தவிர்த்து நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். தமிழக மக்களின் உணர்வுகளை அவர்களில் ஒருவராக நானும் பகிர்ந்து கொள்கிறேன்.

நமது நாட்டுக்கும், மக்களுக்கும், அமைதியும் வளமும் கிடைக்க வேண்டும். மக்கள் இப்பிரச்சினையில் உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும்.

வன்முறை, வெறுப்பில் நாம் நம்பிக்கை அற்றவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். யாருக்கேனும் பாதிப்பு என்றால் எனது தலைமையிலான அரசு உடனடியாக உதவிக் கரம் நீட்டும்.

உதவி நடவடிக்கை எடுப்பதில் நாம் எப்போதும் முதலாவதாக இருப்போம். எனக்கும், எனது அரசுக்கும், தமிழக மக்களுக்கும் கேரள அரசு மீதோ அல்லது கேரள மக்கள் மீதோ எந்த வெறுப்பும் இல்லை. கேரள மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் இடையே எந்த சச்சரவும் இல்லை.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து விவாதிக்க தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் டிசம்பர் 15ம் தேதி கூட்டப்படும். அன்று முற்பகல் 11 மணியளவில் இந்த சிறப்புக் கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தி்ல தமிழகத்தின் உரிமையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும். தமிழகத்தின் உரிமையை நாம் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலமாக மட்டுமே இந்தப் பிரச்சினையில் தீர்வு காண முடியும். எனவே கேரள மக்களின் உடமைகளுக்கு சேதம் உண்டாக்குவது தீர்வைத் தராது. எனவே எல்லையில் கூடியிருக்கும் தமிழக மக்கள் உடனடியாக கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

No comments:

Post a Comment