Friday, December 30, 2011

தமிழகத்தில் ரூ 12 கோடியில் 64 முதியோர், குழந்தை இல்லம்!

Friday, December,30, 2011
சென்னை::தமிழகத்தில் ரூ.12 கோடியில் முதியோர், குழந்தைகள் தங்கும் சிறப்பு விடுதிகள் உள்ளடக்கிய 64 ஒருங்கிணைந்த வளாகங்கள் உருவாக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மாவட்டம்தோறும் முதியோர், ஆதரவற்ற குழந்தைகள் தங்கும் சிறப்பு விடுதிகள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளாகங்கள் உருவாக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த ஒருங்கிணைந்த வளாகத்தில் மூத்த மாற்று திறனாளிகளுக்கான இல்லமும் அமைக்கப்படும். இத்திட்டத்தை அரசு சாரா தன்னார்வ நிறுவனங்கள், பெரிய தொழில் நிறுவனங்களின் உதவியுடன் செயல்படுத்த அரசு தீர்மானித்துள்ளது.

இதன்படி 201112 நிதியாண்டில் முன்னோடி முயற்சியாக தமிழகத்தின் 32 மாவட்டங்களில் மாவட்டத்துக்கு 2 வட்டாரங்கள் என முதியோர், குழந்தை இல்லங்களை உள்ளடக்கிய 64 ஒருங்கிணைந்த வளாகங்களை ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த வளாகங்களில் பள்ளிகள், மருத்துவ வசதிகள், உடற்பயிற்சி, நூலகம் போன்ற பல வசதிகள் இருக்கும். அபாயகரமான சூழ்நிலையில் வாழும் குடும்பங்களை சேர்ந்த 5 முதல் 18 வயதுடைய குழந்தைகள், சமூகரீதியாக ஒதுக்கப்பட்ட குழந்தைகள், எச்ஐவி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், நிராதரவான குழந்தைகள், கைதிகளின் குழந்தைகள், ஆதரவற்ற முதியோர்கள் இந்த இல்லங்களில் தங்க வைக்கப்படுவார்கள். ஒருங்கிணைந்த வளாகம் ஒன்றுக்கு தொடக்க தொடரா செலவினமாக ரூ.2.75 லட்சமும், தொடர் செலவினமாக ரூ.18.40 லட்சம் என 64 ஒருங்கிணைந்த வளாகங்களை ஏற்படுத்த 12 கோடியே 18 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment