Tuesday, November 1, 2011

காரைநகர் கடற்பரப்பினில் இந்திய மீனவர்களுக்கும் உள்ளூர் மீனவர்களுக்குமிடையே நேற்று கைகலப்பு!

Tuesday, November 01, 2011
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர்களுக்கும் உள்ளூர் மீனவர்களுக்குமிடையே நேற்று காரைநகர் கடற்பரப்பினில் இடம் பெற்ற கைகலப்பினில் உள்ளுர் மீனவர்கள் சிலர் காயமடைந்துள்ளனர்.இதே வேளை இச்சம்பவத்தையடுத்து உள்ளூர் மீனவர்கள் முப்பத்திமூன்று பேர் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுடைய படகுகள் பன்னிரண்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்.மாவட்ட மீனவ சமாசங்களின் சம்மேளனத்தலைவர் சி.தவரட்ணம் தெரிவித்தார்.எனினும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் இரவு விடுவிக்கப்பட்டுவிட்டதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்ற போதும் அத்தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

வடமராட்சியின் பருத்தித்துறை முனைப்பகுதியை சேர்ந்த மீனவர்களுக்கும் அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர்களுக்குமிடையேயே கைகலப்புகள் இடம்பெற்றுள்ளது. உள்ளூர் மீனவர்களால் விரிக்கப்பட்டிருந்த வலைகளை இந்திய மீனவர்களுடைய இழுவைப்படகுகள் வெட்டி சேதமாக்கியதாக கூறப்படுகின்றது. இதனால் உள்ளுர் மீனவர்கள் சீற்றங்கொண்டு கைகலப்பினில் ஈடுப்பட்டுள்ளனர்.சம்பவத்தையடுத்து அங்கு விரைந்து வந்த கடற்படையினர் இந்திய மீனவர்ளை விரட்டியடித்ததுடன் உள்ளுர் மீனவர்களை சிறைப்பிடித்துமுள்ளனர்.

எனினும் கடற்படையினரின் இத்தகைய செயல் இந்திய மீனவர்களுக்கு ஊக்கத்தை வழங்கும் அதே வேளை உள்ளூர் மீனவர்களுக்கிடையே கடும் சீற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.ஏற்கனவே இந்திய மீனவர்களை சிறைப்பிடித்த சம்பவம் தொடர்பினில் பழிவாங்கும் நோக்கினில் இத்தாக்குதல்கள் இடம் பெற்றிருக்கலாமென்ற சந்தேகமும் மீனவ அமைப்புகளிடையெ உள்ளது.இதனிடையே இன்று செவ்வாய்கிழமை பருத்தித்துறை முனை பகுதியில் கடற்படையின் வடபிராந்திய கட்டளை அதிகாரி தலைமையில் மீனவர்களுக்கான கூட்டமொன்றிற்கு கடற்படை அழைப்பு விடுத்துள்ளது.

No comments:

Post a Comment