Saturday, November 19, 2011

இலங்கை விடயத்தில் இந்தியா-சீனாவுடன் ஏட்டிக்குப் போட்டியாகச் செயற்படவில்லை:இலங்கைக்கான இந்திய உதவிகள் நட்புறவை நோக்காகக் கொண்டவை-ஷியாம் ஷரண்!

Saturday, November 19, 2011
இலங்கை விடயத்தில் இந்தியா, சீனாவுடன் ஏட்டிக்குப் போட்டியாகச் செயற்படவில்லையென இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் ஷியாம் சரண் தெரிவித்தார். இலங்கைக்கு இந்தியா வழங்கிவரும் உதவிகள் சீனாவுடனான போட்டியால் வழங்கப்படும் உதவிகள் அல்ல என்றும், இந்தியாவின் தனிப்பட்ட கெள்கையின் அடிப்படையில் வழங்கப்படும் உதவிகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் சீனா ஒரு துறைமுகத்தை அபிவிருத்தி செய்தால் இந்தியா போட்டியாக மற்றுமொரு துறைமுகத்தை அபிவிருத்தி செய்கிறது. சீனா இலங்கைக்கு ஒரு உதவியைச் செய்தால், இந்தியா மற்றுமொரு உதவியை செய்கிறது எனப் பலர் கருதுகின்றனர்.

ஆனால், சீனாவுடனான போட்டியில் எந்தச் செயற்பாடுகளையும் இந்தியா முன்னெடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். இந்திய - இலங்கை நட்புறவு மன்றம் நேற்று முன்தினம் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஷியாம் சரண் மேற்கண்டவாறு தெரிவித்தார். ‘இலங்கை - இந்திய நட்புறவு மற்றும் ஆசியாவின் மீளெழுச்சி’ எனும் தலைப்பில் இவர் கருத்துரை வழங்கினார். இந்த நிகழ்வில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக். கே. காந்தா ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டிருந்தனர்.

அங்கு மேலும் கருத்துரை வழங்கிய அவர், ஆசியாவின் மீளெழுச்சியில் சீனா மற்றும் இந்தியாவின் பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கின்றது. சீனா உற்பத்தித்துறையில் முன்னிலையில் காணப்பட்டாலும், இந்தியா சேவைத் துறையில் முன்னிலை வகிக்கிறது. இரு நாடுகளுக்குமிடையில் போட்டிநிலை காணப்பட்டாலும் இலங்கை விடயத்தில் இந்தியா சீனாவுடன் போட்டியிடவில்லை. இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் காணப்படும் நீண்டகாலத் தொடர்பின் காரணமாகப் பல்வேறு உதவிகளை இந்தியா வழங்கி வருகிறது. இந்த உதவிகள் யாவும் இந்தியாவின் தனிப்பட்ட கொள்கைத் திட்டத்துக்கு அமைய வழங்கப்படும் உதவிகள். சீனாவுடனான போட்டியால் வழங்கப்படும் உதவிகள் அல்ல. இந்தியா சீனாவுடன் போட்டியிட்டு உதவிகளை இலங்கைக்கு வழங்குகிறது என்ற கருத்துப் பிழையானது என்றார். இலங்கையில் சீனாவால் அமைக்கப்படும் துறைமுகத்தால் இந்தியாவுக்கு எந்தவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் கருத்துரைத்த அவர், இப்பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும். இரு நாட்டுப் பிரதிநிதிகளும் ஒரே மேசையில் அமர்ந்து பேசித் தீர்க்கவேண்டும். இரு நாட்டு மீனவர்களும் இரு நாட்டுக் கடல் பகுதிகளிலும் மீன்பிடிக்கக் கூடிய இணைந்த செயற்திட்டத்தின் கீழ் இப்பிரச்சினையைத் தீர்க்க முடியும். எனினும், அவ்வாறு மீன்பிடிக்க அனுமதிப்பதாயின் மீன்பிடிப் படகின் அளவு, பிடிக்கக் கூடிய மீன்களின் அளவு உள்ளிட்ட முக்கியமான விடயங்கள் முற்கூட்டியே வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறான வரையறுக்கப்பட்ட திட்டத்தின் கீழ் இரு நாட்டு மீன்பிடிப் பிரச்சினைக்குத் தீர்வுகாணமுடியும். இதுபற்றிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும். மீனவர் பிரச்சினையென்பது இலங்கையுடன் மட்டும் காணப்படும் பிரச்சினையல்ல. நேபாளம், பங்களாதேஷ் போன்ற நாடுகளுடனும் பிரச்சினை காணப்படுகிறது. இவ்விடயத்தை பேச்சுக்களின் மூலமே இலகுவாகத் தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார். இதேவேளை, இலங்கைக்கும், இந்தியாவுக்குமிடையில் நீண்டகாலமாகக் காணப்படும் தொடர்புகள் மற்றும் இந்தியா பொருளாதார ரீதியாக எதிர்கொண்ட சவால்களைக் கையாண்ட விதம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் உரையாற்றும்போது விரிவாகக் கூறினார்.

No comments:

Post a Comment