Sunday, November 27, 2011

ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரச்செயலர் லைன் பாஸ்கோ விரைவில் இலங்கை வரவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன!

Sunday, November 27, 2011
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இலங்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரச்செயலர் லைன் பாஸ்கோ விரைவில் இலங்கை வரவுள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல் கூறுகிறது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த செப்ரெம்பர் மாதம் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுடனான கலந்துரையாடலின் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமையவே லைன் பாஸ்கோ கொழும்பு வரவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன.

ஆனால் அவர் எப்போது கொழும்பு வருவார் என்பது இன்னமும் உறுதியாகவில்லை என்றும், பெரும்பாலும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் இலங்கை வருவதற்குச் சாத்தியமுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன.

அப்போது நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்த ஐ.நாவின் கருத்து வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கொழும்பு ஊடகத் தகவல் கூறுகிறது.

பொறுப்புக்கூறும் விவகாரங்கள் தொடர்பாக, ஆணைக்குழு அறிக்கைக்குப் பதிலளிப்பது குறித்து தெரிந்து கொள்வதற்காக லைன் பாஸ்கோ இலங்கை அரசாங்க தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளதாக நியுயோரக் தகவல்கள் தெரிவிப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அடுத்த மாத தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது, அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விசாரணைப் பொறிமுறை குறித்த விபரங்களை இலங்கை அரசாங்கம் அறிவிக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

போருக்குப் பிந்திய சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் பொறுப்பு இலங்கை காவல்துறையிடம், குறிப்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் கொழும்பு வார இதழ் கூறியுள்ளது.

அறிக்கையின் ஆங்கிலப் பிரதி மட்டுமே முதலில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும், அதன் பின்னரே, தமிழ் மற்றும் சிங்கள மொழிப் பிரதிகள் வழங்கப்படும்.

அத்துடன் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதன் அடிப்படையில், விசாரணைப் பொறிமுறை ஒன்றை அமைப்பது பற்றிய விபரங்களும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment