Friday, November 04, 2011தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தந்தை செல்வா காலத்திலிருந்து இன்றுவரை வாக்குகளைப் பெறுவதற்கு பல யுக்திகளை கையாண்டு வருகின்றது. அன்று அதாவது 1970 ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலிலே வட்டுக்கோட்டையான தனது சொந்தத் தொகுதியிலே அமிர்தலிங்கம் தோற்கடிக்கப்பட்டார்.
அதேபோல் அத் தேர்தலிலே தமிழரசுக்கட்சி படு தோல்வியை சந்தித்தது. இத் தோல்வியில் இருந்து மீள வேண்டும் அதாவது மக்களது வாக்குகளை அபகரிக்க வேண்டும் என்கின்ற அந்த கபட நோக்கின் அடிப்படையிலே தான் 1976ம் ஆண்டு இளைஞர், யுவதிகளையெல்லாம் உசுப்பேற்றி வட்டுக்கோட்டையில் தமிழீழப்பிரகடனம் செய்யப்பட்டது.
இத் தமிழீழ பிரகடனமானது உண்மையிலே பொது நோக்கில் செய்யப்பட்ட ஒன்றல்ல. 1977ம் ஆண்டில் இடம் பெறப்போகும் தேர்தலிலே வெற்றி பெறுவதற்கு வாக்குகளைப் பெறுவதற்கான ஓர் உக்தியாகவே அவர்கள் அதனை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அதேபோன்று தற்போது மிகவும் பூதாகரமான ஓர் பிரச்சினையாக காணி பதிவு பிரச்சினையினை தூக்கிப் பிடித்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றார்கள். இத் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்க்கு நன்கு தெரியும் 1970ம் ஆண்டைப்போல் ஓர் சூழல் இன்று உருவாகிக் கொண்டிருக்கின்றது. அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பை மக்கள் நிராகரிக்கின்ற காலம். ஆகவே மக்களை திசை திருப்பி அவர்களது வாக்குகளை அபகரிக்க வேண்டும் இதற்காகவே இன்று காணிப்பதிவுப் பிரச்சினை மற்றும் உண்ணாவிரதம், வெளிநாட்டுப் பயணங்கள் என மக்களை அவர்கள் காலா காலமாக ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.
உண்மையிலே காணிப்பதிவு என்பது செய்யப்பட வேண்டியதொன்றுதான். அதாவது இப் பதிவின் ஊடாக உண்மையான காணி உரிமங்கள் அற்றவர்களுக்கு தரவுகள் பெறப்பட்டு அறவே காணியற்றவர்களுக்கு சமபங்கீடடின் அடிப்படையில் வழங்குவதற்கான ஓர் திட்டமாகும்.
என்னைப் பொறுத்தவரை இதனை எதிர்ப்பவர்கள் உண்மையிலே சுயநல வாதிகள்தான். அதாவது இதனை பூதாகரமான ஓர் பிரச்சினையாக தூக்கிப் பிடிக்கும் ஆனந்த சங்கரி அவர்களுக்கு பதிவுகள் எதுவுமே இல்லாத பல நூறு ஏக்கர் காணிகள் கிளிநொச்சியிலே இருக்கின்றன. அதற்கான உரிமையாளர்கள் யாருமே இலங்கையில் இல்லை. இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமாயின் அந்தக் காணிகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு காணிகள் அற்றோர்க்கு அரசு பகிர்ந்தளிக்கும். இதே போன்று இரா சம்பந்தனை எடுத்துக் கொண்டால் திருகோணமலையிலே தமிழ் பல்கலைக் கழகம் அமைப்பதற்கென காணி கொள்வனவு செய்யப்பட்டது. அக் காணிக்கு உரிமை கொண்டாடுபவர் சம்பந்தன் அவர்கள்தான். இவ்வாறு தங்களது சுயலாபங்களுக்காக மக்களை தூண்டி விட்டு அதில் குளிர் காய நினைப்பவர்கள் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர். இதனைத்தான் காலங்காலமாக இவர்கள் செய்து வருகின்றார்கள்.
இதற்கு எமது கிழக்கு மாகாண மக்கள் ஓரு போதும் சோரம் போகக் கூடாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் இன்று மட்/வாழைச்சேனை இந்துக்கல்லூரியில் இடம் பெற்ற வருடார்ந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில்,
கிழக்கு மாகாணம் இன்று பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் சகல துறைகளிலும் அபிவிருத்தி கண்டு வருகின்றது. இவ்வளவு காலமும் இவ்வாறான ஓர் நிலை கிழக்கில் இருக்கவில்லை. இதனால் தற்போது உள்ள த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொறுக்க முடியவில்லை. அதனால் இல்லாத பொல்லாத பிரச்சினைகளையெல்லாம் மக்கள் மத்தியில் தோற்றுவித்து அதனூடாக அரசியல் இலாபம் ஈட்ட முற்படுகிறார்கள். இதைத்தான் கடந்த காலங்களிலும் இவர்களது வடக்குத் தலைமை செய்து வந்திருக்கின்றது.
அரசுடன் பதினொரு கட்டப் பேச்சு மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் முக்கிய சந்திப்புகள் என காலங்களை நீடித்துக்கொண்டுதான் செல்கிறார்கள். இதற்கு காரணம் அவர்களிடத்தில் தெளிவான ஓர் கொள்கை வகுப்பு இல்லை. அவ்வாறு இருக்குமாயின் அதனை அடிப்படையாகக் கொண்டு பேசி அது தொடர்பாக மக்களுக்கு தெரியப்படுத்தலாம். ஆனால் இவர்களிடம் எதுவுமே இல்லை. அதனால்தான் மக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டே இருக்கிறார்கள்.
கிழக்கு மாகாண மக்களாகிய நாம் இவர்களது கடந்த கால வரலாறுகளை நன்கு கற்றிருக்க வேண்டும். அப்போது தான் இவர்களுக்கு நாம் சாட்டையடி கொடுக்க முடியும். இனிமேலும் எமக்கு வெளிப்படையாகத் தெரியாத ஒன்றை நம்பி நாம் வாக்களிக்கக்கூடாது. எமது கண்முன்னே தெரிகின்ற அல்லது உணரப்படுகின்றவற்றை முதன்மைப்படுத்தி எமது வாக்குகளை நாம் வழங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், வடக்கிலிருந்துகொண்டு எம்மவர்களை வழி நடாத்துகின்ற கலாச்சாரம் இன்றுடன் முடிவுறுத்தப்பட வேண்டும். இதற்கு எமது மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். இவர்களது தலைமைத்துவத்தின் கீழ் இருந்த காலங்களில் எமது கிழக்கு மாகாணம் என்ன முன்னேற்றத்தைத்தான் கண்டிருக்கின்றது? என நாம் சிந்திக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் எதுவுமே இல்லை. மாறாக உயிரிழப்புக்கள், உடைமை இழப்புகள் என எமது மாகாணம் அழிவுற்ற பின்புலங்களைத் தான் கொண்டிருக்கின்றது.
ஆனால் இந்த மூன்று வருடங்களில் அதாவது கிழக்கு மாகாண சபையினது தோற்றத்தின் பிற்பாடு கிழக்கு மாகாணம் மிகுதியான ஓர் வளர்ச்சிப் போக்கினைத் தொட்டு நிற்கின்றது. இதற்கு உண்மையான காரணம் என்ன என வினவினால் மக்களின் மனங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் தான். இனிமேலும் அடிமையாக வாழ அதாவது எதுவுமே பெறுவதற்கு நாதியற்ற ஓர் சமூகமாக தமிழ் சமூகம் இருந்து விடக்கூடாது என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதன் வெளிப்பாடாகத் தான் கடந்த மாகாண சபைத் தேர்தலிலே அரசுடன் கூட்டுச்சேர்ந்து போட்டியிட்ட எமது கட்சியை ஆதரித்து வாக்களித்து முதலமைச்சராகவும் ஆக்கி இருக்கிறார்கள் எமது மாகாண மக்கள். இச் சந்தர்ப்பத்தினை சரியாகப் பயன் படுத்தி எமது மாகாணத்தை இயன்றளவு ஏனைய மாகாணங்களுடன் போட்டி போட்டு எல்லா வகையான துறைகளிலும் அபிவிருத்தி காண்பதற்கு முயற்சித்து வருகின்றோம் .அதற்கு எமது மக்களும் பூரண பங்களிப்பினை வழங்க வேண்டும் எனவும் முதலமைச்சர் சந்திரகாந்தன் தனது உரையிலே குறிப்பிட்டிருந்தார்.
No comments:
Post a Comment