Friday, November 18, 2011ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் நோக்கங்களுக்கும் கொள்கைகளுக்கும் எதிராக செயற்படுவதுடன் கட்சியின் யாப்பையும் மீறி செயற்படுவதாக இன்று குற்றப்பத்திரிகையொன்று தாக்கல் செய்யப்பட்டது.
அக்கட்சியின் தென்மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி மைத்திரி குணரத்னவினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பத்திரிகை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள இந்த குற்றப் பத்திரிகையில் 20 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
குறித்த 20 விடயங்களிலும் தலைமைத்துவம் ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பை மீறியுள்ளதாக முறைப்பாட்டாளரான மைத்திரி குணரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
கட்சியின் யாப்பை ரணில் விக்கிரமசிங்க மீறியுள்ள சந்தர்ப்பங்களை ஒவ்வொன்றாக சுட்டிக்காட்டியுள்ள மைத்திரி குணரத்ன அந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு சாட்சியாளர்களாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் முன்னாள் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரை உள்ளடக்கியுள்ளார்.
அனைத்து குற்றச்சாட்டுக்களையும் அவர் சாட்சியங்களுடன் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
கட்சியில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்காகவும் தலைமைத்துவத்தில் மாற்றம் ஒன்று அவசியம் எனவும் முன்னின்று கருத்துக்களை வெளியிட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களையும் கட்சியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டமையை அவர் தனது முதலாவது குற்றச்சாட்டாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்காக குரல்கொடுத்த செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களி்ன் செயற்குழு உறுப்புரிமையை ரத்து செய்யும் வகையிலும் தொகுதி அமைப்பாளர் பதவியை நீக்கும் வகையிலும் கட்சியின் உறுப்புரிமையை ரத்து செய்யும் வகையிலும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மைத்திரி குணரத்ன தனது குற்றப்பத்திரிகையில் எடுத்துக்காட்டியுள்ளார்.
கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரபல்யமான செயற்பாட்டாளர்களுக்கு தேர்தல்களின் போது வேட்பு மனுக்கள் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் பொறுப்பு வாய்ந்த பதவிகளுக்காக உறுப்பினர்களை நியமிக்கும் போது தகுதியானவர்கள் இருக்கும் நிலையில் தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்படாத சிலருக்கு அந்தப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கட்சியின் யாப்பிற்கு அமைவாக தலைமைத்துவத்திற்காக போட்டியிட முயற்சித்த சஜித் பிரேமதாஸ மற்றும் தேசிய அமைப்பாளர் பதவிக்குப் போட்டியிடத் தயாரான ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு பகிரங்கமாக ஒத்துழைப்பு வழங்கிய ரோசி சேனநாயக்க, புத்திக பத்திரன, இம்தியாஸ் பாகிர் மாகார் மற்றும் சந்திரா கன்கந்த ஆகியோரின் செயற்குழு உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டமையும் தலைமைத்துவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் உள்ளடங்கியுள்ளன.
அத்துடன் 30 வருடகாலமாக நாட்டில் நிலவிய யுத்தம் நிறைவடைந்த சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களின் பிள்ளைகள் யுத்த களத்தில் போராடிய சந்தர்ப்பத்திலும் நாட்டிற்கு யுத்த வெற்றி அவசியம் என அனைவரும் பிரார்த்தித்த சந்தர்ப்பத்திலும் ரணில் வி்க்கிரமசிங்க அதற்கு ஒத்துழைப்பு வழங்காமை தொடர்பாகவும் இந்த குற்றப்பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏனைய உறுப்பினர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் ஒழுக்காற்று விசாரணைகளைப் போன்று இந்தக் குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள 20 விடயங்கள் தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மைத்திரி குணரத்ன ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரிடம் வேண்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஏனைய உறுப்பினர்களைப் போன்று தலைவரும் கட்சியின் யாப்பையும் கட்சியின் எதிர்கால இலக்கையும் பாதுகாக்கும் கடப்பாடு உடையவர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment