Friday, November 18, 2011இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைய முற்பட்ட புலி உறுப்பினர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுமாறு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்து அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
கொழும்பிற்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சரத் பொன்சேகா இராணுவத்தில் கடமையாற்றிக் கொண்டே அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும் அவருக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் எனவும் கோதபாய தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
ஏனைய அரசியல் பிரதிநிதிகள் வெளியிடும் கருத்துக்களுக்கு முற்றிலும் முரணான வகையில் சரத் பொன்சேகா குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகாவின் அச்சுறுத்தல்கள் மற்றும் துரோகச் செயல்கள் பாரதூரமானவையாகவே கருதப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கோதபாய ராஜபக்ஷவின் நிலைப்பாடு நெகி;ழ்வுத் தன்மையுடன் காணப்படாது என அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
பாதுகாப்புச் செயலாளருக்கும் தூதரக அதிகாரிகளுக்கும் இடையில் 2010ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ம் திகதி நடைபெற்ற சந்திப்பினை அடிப்படையாகக் கொண்டு இந்த குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசியா புட்டீனாசினால் இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சரத் பொன்சேகா வன்முறை சார் அணுகுமுறைகளைப் பின்பற்றக் கூடிய அபாயம் காணப்படுவதாக கோதபாய தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டினால் ராஜபக்ஷ ஆதரவாளர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படலாம் எனவும், சரத் பொன்சேகாவிற்கு தேவையற்ற நெருக்கடிகள் கொடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட மாட்டாது என கோதபாய உறுதியளித்துள்ளார்.
எனினும், பொன்சேகாவிற்கு ஆதரவளித்த இராணுவ உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் மற்றும் கட்டாய ஓய்வு அளிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொன்சேகா வெற்றியீட்டினால் உயிருக்கு ஆபத்துக் ஏற்படக் கூடும் என அரசாங்கத்தைச் சேர்ந்த பலர் அஞ்சுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தம்மீது நம்பிக்கையில்லாவிட்டால் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவின் குடும்பத்தாரை கேளுங்கள் என கோதபாய தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார் என விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
தமக்கு எதிராக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக சரத் பொன்சேகா, ராஜதந்திரிகள் மற்றும் சிரேஸ்ட மதத் தலைவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
2005ம் ஆண்டு அரசாங்கம் தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர் எதிர்க்கட்சியினர் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment