Tuesday, November 22, 2011சென்னை : எழும்பூர் ரயில் நிலையத்தை மாற்றினால் உயிரை விடவும் தயங்க மாட்டோம் என்று நடைபயணத்தில் கலந்து கொண்டவர்கள் கூறினர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை மாற்ற கூடாது, ராயபுரம் ரயில் நிலையத்தை 3வது முனையமாக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ரயிலில் பயணிப்போர் உரிமைகள் தீர்வகம் சார்பில் இன்று நடைபயணம் நடத்தப்பட்டது. சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து நடைபயணம் புறப்பட்டது. ரயிலில் பயணிப்போர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் ஜெயச்சந்திரன், போஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன், வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.விக்கிரம ராஜா, தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் கூட்டமைப்பு தலைவர் மயிலை சி.பெரியசாமி, தமிழக வணிகர் முன்னேற்ற சங்க தலைவர் விபி.மணி, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன், தமிழக பாஜ துணை தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நடைபயணத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் கூறியதாவது:
எழும்பூர் ரயில் நிலையத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று 29 இடங்களில் நடைபயணம் நடைபெற்றது. எழும்பூர் ரயில் நிலையத்தை தாம்பரத்துக்கு மாற்றினால் தென் மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் சென்னைக்கு வர கூடுதலாக 2 மணி நேரமாகும். இதனால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ராயபுரம் ரயில் நிலையத்தை 3வது முனையாக மாற்றி அங்கிருந்து வட மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்க வேண்டும். எழும்பூர் ரயில் நிலையத்தை மாற்றம் செய்ய கூடாது என்பதை வலியுறுத்தி, உயிர் தியாகம் செய்யவும் தயாராக உள்ளோம். இது சம்பந்தமாக தெற்கு ரயில்வே பொது மேலாளரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம் இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment