Friday, November 11, 2011

தமிழக மீனவர் மீதான தாக்குதல் கவலை தருகிறது- இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் பிரமர் மன்மோகன் சிங் பேச்சு!

Friday, November 11, 2011
அட்டு (மாலத்தீவு): தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ராஜபக்சேவிடம் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியதாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய் கூறியுள்ளார்.

மாலத்தீவின் அட்டு என்ற இடத்தில் 17வது சார்க் மாநாடு நடைபெறுகிறது. இதையடுத்து அங்கு பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்கள் குழுமியுள்ளனர். ராஜபக்சேவும் வந்துள்ளார்.

இந்த நிலையில் சங்க்ரில்லா ரிசார்ட்டில் வைத்து ராஜபக்சேவும், பிரதமர் மன்மோகன் சிங்கும் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு 45 நிமிடங்கள் நீடித்தது. தமிழர் பிரச்சினை குறித்தும், இலங்கைக் கடற்படையினரின் மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்தும் இரு தலைவர்களும் பேசினர்.

இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள் கவலை தருவதாகவும், இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ராஜபக்சேவை பிரதமர் வலியுறுத்தியதாக தெரிகிறது.

இலங்கைத் தமிழர்களின் மறு குடியமர்த்தல், மறு சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை விரைவில் மேற்கொள்ளுமாறும், நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறும், தமிழ் மக்களிடையே நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் செயல்படுமாறும் ராஜபக்சேவை பிரதமர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜபக்சே, பிரதமர் மன்மோகன் சிங்குடனான சந்திப்பு நன்றாக இருந்ததாக குறிப்பிட்டார்.

இதேபோல வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவையும் பிரதமர் சந்தித்துப் பேசினார்.

No comments:

Post a Comment