Sunday, November 20, 2011

யாழ் மண்ணின் கலாசாரத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள்!

Sunday, November 20, 2011
வடக்கு, கிழக்கில் அண்மைய காலங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் பல்வேறு கசப்பான சம்பவங்கள் ஒவ்வொன்றும் அனைவரையும் நெருட வைக்கும் கொடூரம் நிறைந்த நிகழ்வுகளாகவே காணப்படுகின்றன.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டதற்கு பின்னரான இன்றைய காலச் சூழல் வடக்கு, கிழக்கு வாழ் மக்களின் வாழ்வியல் போக்குகளிலும் பல்வேறு உள்ளார்ந்த மாற்றங்களை மட்டுமல்ல சமூகச் சீரழிவுகளையும் தோற்றுவித்துள்ள கறைபடிந்த போக்குகளுக்கே வழிவகுத்துள்ளது என்பதையும் தொடரும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் தெட்டத் தெளிவாக உணர்த்தி நிற்பதையும் அவதானிக்க முடிகின்றது-

எந்தவொரு தேசத்திலும் போருக்கு பிந்திய நாட்கள், வாழ்வியல் படிப்பினைகள் ஊடாக சமூக மாற்றத்திற்கான தெளிவான உள்Zர்ப்புகளையே விட்டுச் சென்றுள்ளதை நாம் கடந்தகால வரலாற்று ஆய்வுகள் ஊடாக கற்றுணர்ந்துள்ளோம்.

அக்டோபர் புரட்சிக்கு பின்னரான ரஷ்ய மக்களின் ஒற்றுமையும் தாய் நாட்டுப் பற்றுணர்தலும், சீனாவில் மாஓ சேதுங்கின் மக்கள் புரட்சிக்கு பின்னரான மக்கள் ஆட்சியும், அமெரிக்காவின் கொடூரப் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஹோசிமின் தலைமையிலான, விடுவிக்கப்பட்ட வியட்நாமின் எழுச்சிகர தோற்றமும், நிறவெறி ஆதிக்கத்திலி ருந்து மீண்ட தென்னாபிரிக்காவின் வல்லமையும், கெரில்லா யுத்தத்தின் தந்தையும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான வழிகாட்டியுமான சேகுவேரா, பிடல் காஸ்ரோ தலைமையில் ஒன்றுபட்ட கியூபா மக்களின் புரட்சிகரப் போக்குகளும் போருக்கு பிந்திய மக்கள் வாழ்வியலுக்கான திடகாத்திரமான ஆரோக்கியமான அரசியல் சூழலை தோற்றுவித்ததை எவரும் வரலாற்றின் பக்கங்களிலிருந்து மறைத்து விடவோ அல்லது மறந்து விடவோ முடியாது.

ஆனால் இன அழிப்பு நடவடிக்கைகள் மற்றும் உள்நாட்டு மோதல்கள் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய நிகழ்ச்சிநிரல் திட்டங்களை ஏற்றுக்கொள்ளாத நிலையில் அண்மைய காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பாரிய யுத்த நடவடிக்கைகள் காரணமாக சிதைவடைந்து போயுள்ள ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா போன்ற நாடுகளிலும் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலும் தொடரும் சம்பவங்கள் போருக்கு முந்திய சம்பவங்களை மீண்டும் நினைவூட்டும் கசப்பான சம்பவங்களையே தோற்றுவித்துள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுவதை மறுதலிக்க முடியாதுள்ளது.

ஆயுத பாவனையும் வன்முறைக் கலாசாரமும் இனியொருபோதும் வேண்டாம் என்ற நிலையிலுள்ள வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை மீண்டுமோர் சுனாமிப்பேரலையாக அடிக்கொரு தடவை அவ்வப்போது அகழ்ந்தெடுத்துச் செல்லும் வன்முறையும் வக்கிரமும் நிறைந்த கசப்பான சம்பவங்கள் தொடர்பில் கவனமெடுப்பது மிகவும் அவசியமாகும்.

வன்னி இறுதி யுத்தத்தில் புலிகளின் தலைமைத்துவத்தின் போலித்தனமான அரசியல் தெளிவற்ற போக்கு காரணமாக பல்லாயிரக் கணக்கான மக்கள் உயிரிழந்த நிலையில் எஞ்சித் தப்பியோர் சரணடைந்த நிலையில் இடைத்தங்கல் முகாம்களில் தமது வாழ்நாளின் பல மாதங்களை கழித்த நிலையில் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்ட போதும் அதற்குப் பின்னரான காலங்களில் தொடரும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் இயல்பு நிலைமையை சீர்குலைப்பதாகவே அமைந்துள்ளதையும் காணக்கிடைக்கிறது.

மீள் குடியேற்றப்பட்ட மக்கள் வசிக்கும் பெரும்பாலான பகுதிகளில் இராணுவ முகாம்கள் இன்னமும் உள்ளன. படையினரின் ரோந்து நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. எனினும் இப்பகுதிகளில் தொடரும் கசப்பான சம்பசங்கள் தொடர்பில் ஒரு சில சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டுள்ள போதிலும் பெருமளவிலானோர் தப்பிச் செல்வதற்கு ஏதுவான காரணங்கள் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது தர்க்க ரீதியானதும் நியாயமான கேள்விப்படுத்தலுமேயாகும்.

குறிப்பாக யாழ். குடாநாட்டில் அண்மைய காலங்களில் மிகவும் மோசமாக அதிகரித்துள்ள சமூக சீரழிவுகள் தொடர்பில் நாம் அனைவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

யாழ். குடாநாட்டின் நகர்ப்புற மாணவர்கள் மத்தியில் தற்போது போதைப் பொருள் பாவனை மிகவும் மோசமாக அதிகரித்துள்ளது தொடர்பில் கிடைக்கப் பெறும் தகவல்கள் மிகவும் கவலையளிப்பதாகவே உள்ளன. பாதைப் பொருள் பாவனையில் ஈடுபட்ட யாழ். குடாநாட்டு மாணவர்கள் பலர் அண்மையில் (8ஜி செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அதனை விநியோகிக்கும் பலரும் கைது செய்யப்பட்டுள்ளமையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதொரு விடயமாகும்.

யாழ். குடாநாட்டில் மாணவர்களுக்கும் ஏனையோருக்கும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடும் ஒருவர் இரு மணி நேரத்தில் 45 ஆயிரம் ரூபாவிற்கும் மேலான வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளது பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

அது மட்டுமன்றி புளூபிலிம், ஆபாச இறுவெட்டுக்களின் பாவனையும் அது தொடர்பான வர்த்தகமும் பெருமளவில் இடம்பெற்று வருவதாகவும் அறிய வருகிறது. ஆபாச இறுவெட்டுக்களின் பாவனையும் அது தொடர்பான வர்த்தகமும் மாணவர்கள் மட்டத்திலேயே அதிகளவில் பரவி வருவதாகவும் தெரிய வருகிறது. இவ்வாறான தொடரும் சமூகச் சீரழிவுகளை கட்டுப்படுத்த துரித நடவடிக்கையெடுப்பது அவசியமாகும். இதற்கு பெற்றோரின் விழிப்புணர்வும் அவசியமாகும்.

அதுமட்டுமன்றி மாலை நேரங்களில் சந்திக்கு சந்தி குழுமி நிற்கும் இளைஞர்கள் கூட்டம் மோட்டார் சைக்கிள்களில் ஊர்வலம் செல்வது போன்று சென்று தனியார் வகுப்புகளுக்கு சென்றுவிட்டு செல்லும் மாணவிகள் மட்டுமன்றி வீதிகளில் தனியாக செல்லும் குடும்பப் பெண்களிடமும் தகாத வார்த்தைகளை கூறி அநாகரீகமான முறையில் நடந்து கொள்வது தொடர்பிலும் முறையிடப்பட்டுள்ளது. சமூகச் சீரழிவின் உச்சத்தையே இது வெளிக்காட்டி நிற்கிறது.

இது தொடர்பில் ஏற்கனவே சாவகச்சேரி நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை யடுத்து இவ்வாறு வீதிகளில் பெண்களை மானபங்கப்படுத்தும், தொந்தரவு செய்யும் இளைஞர்களை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டமையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதொரு விடயமாகும்.

இவையெல்லாவற்றையும் விட யாழ். நகரப் பகுதியில் இயங்கிவந்த விபசார விடுதியொன்று அண்மையில் பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்த ஆண்களும், பெண்களும் பொலிசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் யாழ். குடாநாட்டின் கலாசார பாரம்பரியத்திற்கு கறைபடிந்த ஒரு நிகழ்வாகவே கருதப்படுகின்றது.

யாழ். நகரின் மையப்பகுதியில் மிக நீண்ட காலமாக இயங்கிவந்த குறிப்பிட்ட விபசார விடுதி பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றையடுத்து சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்ட போது உண்மை வெளியுலகிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுவோர் வெட்கப்பட வேண்டிய விடயம் என்பதற்கு அப்பால் கடந்த கால அழிவுகளுக்குப் பின்னர் தமிழ்ச் சமூகம் எதிர்கொண்டுள்ள வேதனைப்பட வேண்டியதொரு விடயமாகும். அதேநேரம் குறிப்பிட்ட இந்த விபசார விடுதி அங்குள்ள அரசியல் கட்சியொன்றின் முக்கிய பிரமுகர் ஒருவரினாலேயே நடத்தப்பட்டு வந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகள் மூலம் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது தொடர்பில் என்ன சொல்ல முடியும்? வேலியே பயிரை மேய்ந்த கதையை விடக் கொடூரமானது இந்தச் சம்பவம். யுத்தம் உக்கிரமடைந்திருந்த முன்னைய காலங்களில் அநுராதபுரம், பொலநறுவை போன்ற பகுதிகளிலும் இவ்வாறு இயங்கி வந்த பல்வேறு விபசார விடுதிகள் தொடர்பான உண்மைகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளமையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

எனினும் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள இன்றைய சூழ்நிலையில் கலாசாரத்திற்கும் தமிழர் பண்பாட்டியல் மேம்பாட்டிற்கும் பேர் பெற்ற யாழ். குடாநாட்டில் விபசார விடுதி நடத்தப்பட்டுள்ள விடயம் அனைவருக்கும் வியப்பளிக்கும் விடயமாகவே கருதப்படுகிறது.

இவையெல்லாவற்றையும் விட யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பகிடிவதைகளும் தற்போது கட்டுக்கடங்காத ஒன்றாக அமைந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவைச் சேர்ந்த முதலாம் வருட மாணவன் ஒருவன் இரண்டாம் வருட மாணவர்களின் பகிடிவதையால் தாக்குதலுக்குள்ளாகி யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். போரின் வடுக்கள் மாறாத நிலையில் இவையெல்லாம் எதற்காக என்பது தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஏன் சிந்திக்க தயங்குகின்றார்கள்.

கிரீஸ் மனிதன் என்ற அச்சம் தரும் நிகழ்வு தணிந்துள்ள நிலையில் வடக்கு, கிழக்கு மக்களின் சமூக வாழ்நிலைக் கட்டமைப்புகளை சிதைக்கும் போதைவஸ்து பாவனை, விபசாரம், ஆபாசப் பட இறுவட்டுக்களின் விநியோகம், பல்கலைக்கழக மாணவர்களின் பகிடி வதை, படுகொலை கலாசாரம், கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் இவற்றின் பின்னணியிலுள் ளோர் யார்?

பல்லாயிரக் கணக்கான மக்களை பலிகொடுத்த கடந்த மூன்று தசாப்தகால வடக்கு, கிழக்கு மக்களின் போருக்கு பிந்திய இன்றைய வாழ்வு எங்கே சென்றுகொண்டி ருக்கிறது? கண்ணை மூடிக்கொண்டு குற்றஞ் சுமத்துவதை விட்டு விட்டு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய பாரியதோர் விடயமாகும்.

No comments:

Post a Comment