Saturday, November 26, 2011

புலிகளுக்கு தேவையான பின்னணியை சிலர் அன்று உருவாக்கியது போன்று இன்று மங்கள சமரவீர அவ்வாறான நிலையை ஏற்படுத்த முயல்கின்றார்-சுசில் பிரேம்ஜயந்த்!

Saturday, November 26, 2011
மக்கள் அமைதியாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்தியதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசு மக்களுக்கு வழங்கிய மிகப் பெரிய நிவாரணமாகும். சம்பள உயர்வு, சமுர்த்தி நிவாரண அதிகரிப்பு தவிர பல நிவாரணங்கள் இந்த வரவு செலவுத் திட்டத்தினூடாக வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு இரண்டாம் வாசிப்பு மீதான நான்காவது நாள் விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:-

நாட்டில் அமைதியை நிலைநாட்ட பல்வேறு ஆட்சியினர் முயன்றாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அதனை நிறைவேற்ற முடிந்தது.

சிரேஷ்ட அடிப்படையிலே உச்சநீதிமன்ற நீதியரசர்கள், பிரதம நீதியரசர்கள் போன்றோர் நியமிக்கப்பட்டனர்.

புலிகளுக்கு தேவையான பின்னணியை சிலர் அன்று உருவாக்கியது போன்று, இன்று மங்கள சமரவீர அவ்வாறான நிலையை ஏற்படுத்த முயல்கின்றார். மத்திய கிழக்கு அரசியல் நெருக்கடி நிலையை இலங்கையுடன் ஒப்பிட முயலாதீர்கள். எமது நாட்டைப் போன்று அங்கு ஜனநாயக தேர்தல் முறை இருக்கவில்லை.

மங்கள சமரவீரவை சேர்த்துக் கொண்டதாலே ஐ. தே. க. தொடர்ந்து தேர்தலில் தோற்றுவருகிறது. அவர் நீதிமன்றத்தை அவமதித்தது குறித்து கவலைப்படுகி றேன். பாராளுமன்ற வரப்பிரசாதங் களை பயன்படுத்தி நீதிபதிகளை அவமதித்தார். நீதிமன்ற நடவடிக்கை பாதிப்படைய எமது அரசு ஒரு போதும் இடமளிக்காது.

படைவீரர்களினதும் மக்களினதும் அர்ப்பணிப்பால் பெற்ற சமாதானத்தைக் குழப்ப முயலும் மங்கள சமரவீர போன்றவர்களுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவர்.

18 ரூபா குறைந்த விலைக்கே டீசல் விற்கப்படுகிறது. இதனால் அரசு தினமும் 90 மில்லியன் நஷ்டத்தை சுமக்கிறது.

மண்ணெண்ணெய் 31 ரூபா குறைவாக வழங்கப்படுகிறது. இதுவும் மக்களுக்கு வழங்கும் நிவாரணமே.

மழை குறைந்துள்ளதால் 70-75 வீதம் மின்சாரம் எரிபொருள் மூலமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கான எரிபொருளை குறைந்த விலைக்கே வழங்குகிறோம்.

பெற்றோல் மூலம் 600 மில்லியன் ரூபா இலாபமீட்டினாலும் ஏனைய எரிபொருட்கள் மூலம் 2700 மில்லியன் நஷ்டம் ஏற்படுகின்றது.

சம்பள உயர்வு, சமுர்த்தி நிவாரண அதிகரிப்பு பற்றி மட்டுமே பேசினாலும் மேலும் பல நிவாரணங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெற்றோல் ஒரு லீட்டர் இலங்கை ரூபாவில் 170 ரூபாவிற்கு விற்கப்படுகிறது.

இறக்குமதியை பலவீனப்படுத்தவும் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் ரூபாவின் பெறுமதி குறைக்கப்பட்டுள்ளது.

மக்கள் வாழக்கூடிய அமைதியான நிலையைக் குழப்புவதே மங்கள சமரவீர போன்றோர்களின் நோக்கமாகும் என்றார்.

No comments:

Post a Comment