Thursday, November 03, 2011மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் இருந்து பாரிமுனை, சென்ட்ரல், அண்ணாநகர் பகுதிகளுக்கு இன்று முதல் மீண்டும் ஏசி பஸ்கள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் வசதிக்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து நகரின் முக்கிய இடங்களுக்கு மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஏசி பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. விமான நிலைய விரிவாக்க பணி மற்றும் சில பிரச்னைகள் காரணமாக விமான நிலையத்துக்கு ஏசி பஸ்கள் வர தடை செய்யப்பட்டது. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர். மீண்டும் ஏசி பஸ்களை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், இன்று காலை முதல் மீண்டும் ஏசி பஸ்கள் இயக்கப்படுகிறது. அண்ணா நகர், பாரிமுனை, சென்ட்ரலுக்கு 3 ஏசி பஸ்கள் விடப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு, வடபழனி வழியாக அண்ணாநகர் மேற்கு வரை ஒரு பஸ்சும் கிண்டி, காந்தி மண்டபம், அடையாறு, பார்க் ஷெரட்டன் ஓட்டல், தாஜ் கோரமண்டல், தாஜ் கன்னிமாரா ஓட்டல்கள் வழியாக பாரிமுனைக்கு ஒரு பஸ்சும் இயக்கப்படுகிறது. மற்றொரு பஸ் கிண்டி, சைதாப்பேட்டை, அண்ணா சாலை, எழும்பூர், சென்ட்ரல் வழியாக பாரிமுனை சென்று திரும்பும்.
ஒரு நாளைக்கு எத்தனை சேவைகள் என்று போக்குவரத்துக்கழகம் அறிவிக்கவில்லை. இந்த பஸ்சில் குறைந்த கட்டணம் ரூ.100. அதிகபட்சமாக 150 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். ‘‘விமான நிலையத்தில் இருந்து ஏசி பஸ்கள் இயக்குவது சந்தோஷமாக உள்ளது. லக்கேஜூகளை ஈசியாக எடுத்து செல்ல முடிகிறது. குறிப்பிட்ட இடத்துக்கு மட்டும் இப்போது பஸ் விட்டுள்ளனர். முக்கிய இடங்கள் அனைத்துக்கும் பஸ் விட்டால் இன்னும் வசதியாக இருக்கும்’’ என்று பயணிகள் கூறினர்.
No comments:
Post a Comment