Thursday, November 24, 2011புதுடெல்லி : 2ஜி வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள திமுக எம்பி கனிமொழி மற்றும் 5 பேரின் ஜாமீன் மனு மீது நாளை விசாரணை நடத்தப்படுகிறது. ஜாமீன் மனு மீதான விசாரணையை உடனடியாக நடத்த வேண்டும் என கனிமொழி தரப்பில் வைத்த கோரிக்கையை டெல்லி ஐகோர்ட் ஏற்றுக் கொண்டுள்ளது. 2ஜி வழக்கில் கைதான கனிமொழி, சரத்குமார், கரீம் மொரானி, ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இதன் மீதான விசாரணை வரும் டிசம்பர் 1ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் கைதான ரிலையன்ஸ், ஸ்வான், யூனிடெக் நிறுவனங்களின் அதிகாரிகள் 5 பேருக்கு சுப்ரீம் கோர்ட் நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் நேற்று மாலையில் திகார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் தங்களது ஜாமீன் மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என கனிமொழி உள்பட 5 பேரும் டெல்லி ஐகோர்ட்டில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட ஐகோர்ட், இவர்களது ஜாமீன் மனு மீது நாளை விசாரணை நடைபெறும் என அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment