Tuesday, November 08, 2011பெர்லின்: பலூன் போல இன்ஜின், அதற்கு மேல் ஒரு சாய்வு நாற்காலி, அதில் இருந்து விரியும் கிளைகளில் 16 விசிறிகள்.. இவற்றை மட்டுமே பயன்படுத்தி ஜிவ்வென்று விண்ணில் பறக்கும் ‘மல்ட்டிகாப்டர்’ உருவாக்கி அசத்தியிருக்கின்றனர் ஜெர்மனி இளைஞர்கள். ஜெர்மனியை சேர்ந்த இளம் இன்ஜினியர்கள் தாமஸ் செனகல், ஸ்டீபன் உல்ஃப், அலெக்சாண்டர் ஜோசல். இவர்கள் ‘இ-வாலோ’ என்ற மல்ட்டிகாப்டரை உருவாக்கியுள்ளனர். இதன் சோதனை ஓட்டம் 2 நாட்களுக்கு முன்பு நடந்தது. பலூன் உருளை மீது இருந்த சீட்டில் உட்கார்ந்து செனகல் இயக்கினார். தரையில் இருந்து ஜிவ்வென்று உயரே கிளம்பிய இ-வாலோ, ஒன்றரை நிமிடம் நிதானமாக பறந்து பத்திரமாக தரையிறங்கியது. இந்த சாதனை பற்றி அவர்கள் கூறியதாவது:
ஹெலிகாப்டரை இயக்க நல்ல பயிற்சி வேண்டும். மேலும், வானிலை உள்பட பல்வேறு காரணிகள் சாதகமாக இருக்க வேண்டும். ‘இ-வாலோ’வில் அது அவசியம் இல்லை. எளிமையான தொழில்நுட்பம், சாதாரணமான இன்ஜின் பயன்படுத்தியுள்ளோம். வீடியோகேம்களில் இருப்பது போன்ற ஜாய் ஸ்டிக்தான் இதை இயக்க பயன்படுத்தப்படுகிறது. சட்டென்று கிளம்பலாம்.. சட்டென்று தரையிறக்கலாம். வாகனத்தின் மொத்த எடை 80 கிலோ. மையத்தில் இன்ஜின், அதற்கு மேல் சீட். பக்கவாட்டில் கிளைகள் போன்ற செட்டப். அதில் 16 விசிறிகள்.
அது சுற்றி, லித்தியம் பேட்டரிகள் சார்ஜ் ஆவதால் இ-வாலோ இயங்குகிறது. 16 விசிறிகளில் நான்கு செயலிழந்தால்கூட, மல்ட்டிகாப்டர் சிரமமின்றி பறக்கும். சோதனை ஓட்டத்திலேயே ஒன்றரை நிமிடம் பறந்தது மாபெரும் சாதனை. மேலும், ஒரு மணி நேரம் பறப்பதற்கான மின்செலவு ரூ.400 மட்டுமே. சக்தி வாய்ந்த பேட்டரிகள், இன்ஜின் பயன்படுத்தி, தொழில்நுட்பத்தை மேம்படுத்தினால் சூப்பர் மல்ட்டிகாப்டரை உருவாக்க முடியும்.
நீண்ட நேரம் வானில் வட்டமடித்து, நீண்ட தூரம், நீண்ட உயரம் பறப்பதற்கேற்ற மாற்றங்கள் செய்து வருகிறோம். அவசரகால மீட்பு பணிகள், ஆம்புலன்ஸ் சேவை, கட்டிடங்களை பார்வையிடுவது, வானிலை ஆய்வு ஆகியவற்றில் இதை பயன்படுத்தலாம். டிராபிக் ஜாமில் சிக்காமல் பறக்கும் கார் போலவும் இதை பயன்படுத்தலாம். ஜிபிஎஸ் கருவியும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. கீழே இருந்தபடியே ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கி, ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு இ-வாலோவை பறக்க செய்யவும் முடியும்.
No comments:
Post a Comment