Monday, November 14, 2011

அத்வானி கொலை முயற்சி சதியில் பின்னணி: சென்னையில் பா.ஜனதா ஆர்ப்பாட்டம்!

Monday, November 14, 2011
சென்னை: தமிழ்நாட்டில் ரதயாத்திரை நடத்திய பா.ஜனதா தலைவர் அத்வானியை மதுரை அருகே பைப் வெடிகுண்டு மூலம் கொல்ல முயற்சி நடந்தது. தக்க சமயத்தில் அந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு தீவிரவாதிகள் முயற்சி முறியடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பாரதீய ஜனதா சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில துணைத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

அத்வானி ரதயாத்திரையால் இந்தியா முழுவதும் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. அடுத்த தேர்தலில் பாரதீய ஜனதா ஆட்சியை பிடிப்பது உறுதி என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு தீவிரவாதத்துக்கு துணை போகிறது. தமிழ்நாட்டில் ரதயாத்திரை மேற்கொண்ட அத்வானியை கொல்ல பைப் வெடிகுண்டு மூலம் முயற்சி நடந்தது. அந்த முயற்சி முறியடிக்கப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது பாராட்டுக்குரியது.

அதே நேரத்தில் இந்த சதிதிட்டத்தை தூண்டி விட்டவர்கள் யார்? பின்னணியில் இருந்து இயக்குபவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அமைதி பூங்காவான தமிழகத்தில் எந்த வடிவத்திலும் தீவிரவாதத்தை அனுமதிக்க முடியாது.

தீவிரவாதிகளுக்கு இந்த துணிச்சல் வருவதற்கு காரணம் மத்திய அரசின் மென்மையான போக்குதான். பாகிஸ்தான் மந்திரி சொல்கிறார், தீவிரவாதி கசாப்பை தூக்கிலிடுங்கள் என்று. உச்சநீதிமன்றம் சொல்கிறது அப்சல்குருவை தூக்கில் போடுங்கள் என்று. ஆனால் அவர்களை மத்திய அரசு பாதுகாக்கிறது. இதனால்தான் தீவிர வாதிகள் துணிச்சலுடன் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

பாரதீய ஜனதா அரசு ஆட்சிக்கு வந்தால் தீவிரவாதம் ஒழியும். வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் மீட்கப்படும். உலகுக்கே வழி காட்டியாக இந்தியா தலை சிறந்த நாடாக மாறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் வானதி சீனிவாசன், மாவட்ட தலைவர்கள் ஜெய்சங்கர், பிரகாஷ், ரவிச்சந்திரன், தென் சென்னை மாவட்ட செயலாளர்கள் திருப்புகழ், ஆறுமுகராஜ், கேன்ஸ், ஸ்ரீதர், விவேகானந்தன், காளிதாஸ், ராதா கிருஷ்ணன், அனு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment