Monday, November 28, 2011

இலங்கையில் மக்களை பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகிச் சென்றுள்ளது-ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது!

Monday, November 28, 2011
இலங்கையில் கடத்தல் மற்றும் காணாமற்போதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதென ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அண்மைக்காலமாக நாட்டில் இடம்பெற்ற சம்பவங்களை ஆராய்ந்தபோது இந்த விடயம் உறுதி செய்யப்பட்டதாக ஆணைக்குழுவின் கொள்கை வகுப்பு பிரிவி்ன் பணிப்பாளர் பெசில் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

மக்களை பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகிச் சென்றுள்ளதாக அவர் கூறினார்.

இலங்கையில் சட்டத்தை பாதுகாப்பது தொடர்பில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படவில்லை என்பதையே கடத்தல் மற்றும் காணாமல்போதல் சம்பவங்களின் அதிகரிப்பு உணர்த்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமற்போதல் என்பது மிகவும் பாரதூரமான குற்றச் செயலாகும் என தெரிவித்த ஆணைக்குழுவின் கொள்கை வகுப்புப் பிரிவின் பணிப்பாளர் உலகின் அநேகமான நாடுகளில் இது இடம்பெறுவதில்லை என கூறினார்.

சட்டம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாததே கடத்தல் மற்றும் காணாமற்போதல் சம்பவங்கள் அதிகரிப்பதற்கு காரணமாகும் என அவர் மேலும் தெரிவிக்கிறார்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹணவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியபோது, 2009 ஆம் ஆண்டு முதல் கடந்த 22 ஆம் திகதி வரை சுமார் 100 கடத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கூறினார்.

கடத்தப்பட்டவர்களில் 26 பேரை தவிற ஏனையவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஏனையவர்களை கண்டுப்பிடிப்பதற்கான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாதக அவர் மேலும் தெரிவிக்கிறார்.

No comments:

Post a Comment