Wednesday, November 30, 2011

கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்படும்-ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா!

Wednesday, November 30, 2011
கிளர்ச்சயாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். விசாரணைகளை நடத்துவதற்காக மூவர் அடங்கிய ஒழுக்காற்று குழுவொன்றை ஜே.வி.பி. மத்திய செயற்குழு நியமித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜினதாச கித்துலேகொட மற்றும் லக்ஸ்மன் நிபுணாரச்சி ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

கட்சியின் எந்தவொரு உறுப்பினரும் கட்சியையோ அல்லது தலைமைத்துவத்தையோ விமர்சனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சியின் அனுமதியுடன் உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு தங்களது கருத்துக்களை வெளியிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் ஸ்தாபகத் தலைவர் ரோஹண விஜேவீரவின் நினைவு தின நிகழ்வுகளை தனியாக நடத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கிளர்ச்சியாளாகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளர்ச்சியாளர்கள் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், கிளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் செல்ல முற்பட்டதாகவும் அதனால் அவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தம்மை கடுமையான சோதனைக்கு உட்படுத்தி அவமானப்படுத்தியதாக ஜே.வி.பி கிளர்ச்சி குழு உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment