Monday, November 7, 2011

கவர்னர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றனர்!

Monday, November 07, 2011
சென்னை: முதல்- அமைச்சர் ஜெயலலிதாவையும் சேர்த்து மொத்தம் 34 அமைச்சர்கள் இருந்தனர். உடல் நல குறைவு காரணமாக இலாகா இல்லாத மந்திரியாக இருந்து வந்த சொ.கருப்பசாமி (சங்கரன்கோவில் தொகுதி எம்.எல்.ஏ.) சமீபத்தில் மரணமடைந்தார்.

இதையடுத்து அமைச்சர்களின் எண்ணிக்கை 33 ஆனது. இந்த நிலையில், தமிழக அமைச்சரவை நேற்று முன்தினம் அதிரடியாக மாற்றி அமைக்கப்பட்டது. முதல்- அமைச்சர் ஜெயலலிதா 3-வது முறையாக தனது மந்திரிசபையை மாற்றி அமைத்தார்.

6 அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு, புதிதாக 6 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் ஆலோசனையின் பேரில் 6 அமைச்சர்களை நீக்கிவிட்டு, புதிதாக 6 அமைச்சர்களை நியமிக்க கவர்னர் கே.ரோசய்யா ஒப்புதல் வழங்கினார்.

அதன்படி, ஊரக தொழில்துறை அமைச்சர் சி.சண்முகவேலு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், கால்நடைத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி, தகவல், சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் ஜி.செந்தமிழன், உணவுத்துறை அமைச்சர் புத்திசந்திரன் ஆகிய 6 பேர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.தாமோதரன் வேளாண்மைத்துறை அமைச்சராகவும், நன்னிலம் தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.காமராஜ் உணவு அமைச்சராகவும், பரமக்குடி (தனி) தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் எஸ்.சுந்தர்ராஜ் கைத்தறித்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.

அதுபோல, திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. எம்.பரஞ்சோதி இந்து சமய அறநிலையம் மற்றும் சட்டத்துறை அமைச்சராகவும், மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ. வி.மூர்த்தி பால்வளத்துறை அமைச்சராகவும், சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ. கே.டி.ராஜேந்திர பாலாஜி தகவல் மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர். அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்றது.

அங்குள்ள தர்பார் ஹாலுக்கு பிற்பகல் 2.55 மணிக்கு கவர்னர் ரோசய்யா வந்தார். கவர்னரை முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அரசு தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். விழா மேடையில், முதல்- அமைச்சர் ஜெயலலிதா புதிய அமைச்சர்களாக பதவியேற்பவர்களை கவர்னருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதையடுத்து தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. அமைச்சராக பொறுப்பேற்பவர்களின் பெயர்களை தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி அழைத்தார்.

முதல்- அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அமைச்சர்கள் எஸ்.தாமோதரன், ஆர்.காமராஜ், வி.மூர்த்தி, மு.பரஞ்சோதி, எஸ்.சுந்தர்ராஜ், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகிய 6 பேருக்கும் கவர்னர் ரோசய்யா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அனைத்து அமைச்சர்களும் `ஆண்டவன் மீது ஆணையிட்டு' உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அமைச்சர்கள் பதவியேற்று முடித்ததும் கவர்னருக்கும், முதல்-அமைச்சருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு அவரவர் இருக்கையில் போய் அமர்ந்தனர். பதவியேற்பு நிகழ்ச்சி பிற்பகல் 3மணியில் இருந்து 3.10 மணி வரை நடைபெற்றது. தேசிய கீதத்துடன் விழா நிறைவடைந்தது. அதையடுத்து கவர்னர் ரோசய்யா மற்றும் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுடன் அனைத்து அமைச்சர்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், புதிய அமைச்சர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் கலந்து கொண்டனர். இப்போது 3-வது முறையாக தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த ஜுன் மாதம் 27-ந் தேதி தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. முகமது ஜான் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அவருக்கு பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த ஜுலை மாதம் 3-ந் தேதி, தமிழக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டது. சட்டத்துறை அமைச்சர் இசக்கி சுப்பையா நீக்கப்பட்டார். புதிதாக கடையநல்லூர் எம்.எல்.ஏ., செந்தூர்பாண்டியன் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கதர் கிராம தொழில்கள் துறை ஒதுக்கப்பட்டது. முதல்- அமைச்சருடன் புதிய அமைச்சர்களையும் சேர்த்தால் தமிழக அமைச்சரவையில் தற்போது 33 அமைச்சர்கள் உள்ளனர்.

No comments:

Post a Comment