Wednesday, November 2, 2011

இடம்பெயர்ந்த மக்களது நலன்களில் பிரதேச செயலர்கள் தீவிர கவனம்- டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, November 02, 2011
இடம்பெயர்ந்த நிலையில் நலன்புரி முகாம்களிலும் பிற இடங்களிலும் வாழும் மக்களது நலன்களில் பிரதேச செயலர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

யாழ் மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் மீளாய்வுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் நீண்டகாலமாக நாட்டில் ஏற்பட்டிருந்த யுத்த சூழல் காரணமாக தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்களில் பலர் தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாத நிலையில் தொடர்ந்தும் திறந்த நலன்புரி முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறு இதுவரையில் மீள்குடியேற்றம் செய்யப்படாதுள்ள பகுதிகளை தமது சொந்த இடங்களாகக் கொண்ட பெரும்பாலான மக்களுக்கு குடியிருப்பு, மலசலகூடம், நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அந்தந்த பிரதேச செயலகங்கள் இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதிலும், அந்த மக்களது நலன்களைப் பாதுகாப்பதிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனவும் பணிப்புரை வழங்கினார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்ற இரு மாவட்டத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது மீள்குடியேற்றம், கண்ணிவெடி அகற்றல், போக்குவரத்து, உள்ளூராட்சித் திணைக்களம், வீட்டுத் திட்டம், விவசாயம், நீர்ப்பாசனம், மீன்பிடி, பனை அபிவிருத்தி சபை, வாழ்வாதாரம், வீதிப்புனரமைப்பு, மரநடுகை, சுகாதாரம், மின்சாரம், கல்வி, வர்த்தகத்தொழிற்துறை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் சில கோரிக்கைகள் தொடர்பில் உடனடிக் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்பிரகாரம் யாழ்.மாவட்டத்தின் மண்டைதீவு மற்றும் வரணி பகுதிகளில் பொதுமக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள படையினரை அங்கிருந்து விலக்குவது தொடர்பாகவும், அந்தக் காணிகளை மீளவும் பொதுமக்களிடம் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை தொடர்பில் கவனம் செலுத்தப்படுமெனவும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்படுகின்ற தடைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுமெனவும் இணைத்தலைவர்கள் உறுதிமொழி வழங்கினார்.

அத்துடன் இருமாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற குளங்கள், வீதிகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் உள்ளிட்டவற்றின் புனரமைப்புப் பணிகள் தொடர்பிலும் வடக்கின் வசந்தம் திட்டத்தினூடான மின்சார விநியோகத் திட்டம் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

இதனிடையே இம்மாதம் 15 ஆம் திகதி மரம்நாட்டு விழாவொன்று மாகாணசபையூடாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அதற்கான நிதியுதவியை மாகாண ஆளுநர் வழங்கவுள்ளதுடன், ஆனையிறவு உப்பளம் மற்றும் அச்சுவேலி தொழிற்பேட்டையை மீளவும் இயங்குவதனூடாக ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்குமெனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் இரு மாவட்டங்களிலும் குடியிருப்பு இல்லாத மக்களுக்கு தற்காலிக வீட்டுத்திட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் அதேவேளை உடனடியாக கூரைத்தகடுகளை பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் குறிப்பாக தொடர்ச்சியாக மழை பெய்தும் அனர்த்தம் ஏற்படும் பட்சத்தில் மக்களுக்கான வெள்ள நிவாரணத்தை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட இலங்கை போக்குவரத்து சபையினர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய புதிய கணனி ஒன்றை பெற்றுத் தருவதாக உறுதிமொழி வழங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அடுத்த யாழ்.கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 29 ம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தில் நடத்தப்படுமெனவும் தெரிவித்தார்.

இதன்போது ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதயன், யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, யாழ்.மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், வடமாகாண பிரதம செயலாளர் சிவசுவாமி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், உடனிருந்தனர். இதில் இரு மாவட்டங்களில் திணைக்களங்களின் துறைசார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment