Saturday, November 26, 2011புதுடெல்லி: மத்திய அமைச்சர் சரத்பவார் சீக்கிய இளைஞர் ஒருவரால் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பை அதிகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டெல்லி பாராளுமன்ற தெருவில் உள்ள ஓர் அரங்கில் மத்திய உணவு அமைச்சர் சரத்பவார் கலந்துகொண்டபோது ஹர்வீந்தர்சிங் என்ற சீக்கிய இளைஞர் அவர் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார். விலைவாசி தாறுமாறாக உயர்ந்ததற்கு சரத்பவாரே காரணம் என்றும் அதனால்தான் தான் அவரை அறைந்ததாகவும் ஹர்வீந்தர்சிங் போலீசாரிடம் கூறியுள்ளார். மத்திய அமைச்சர் சரத்பவார் தாக்கப்பட்ட சம்பவம் அரசியல் கட்சி தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் வி.ஐ.பி.க்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து மத்திய உள்துறை ஆய்வு செய்து வருகிறது. ஏற்கனவே மத்திய மந்திரிகளுக்கு 6 சிறப்பு போலீசார் பாதுகாப்புக்கு உள்ளனர். அவர்கள் சுழற்சி முறையில் மந்திரிகளுக்கு பாதுகாப்பாக உள்ளனர். இனி இந்த பாதுகாப்பு அதிகரிக்கப்படும். மத்திய மந்திரிகள் வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும்போது தேவைக்கு ஏற்ப பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சரத்பவாரை தாக்கிய ஹர்வீந்தர்சிங் பத்திரிகையாளர் பகுதியில் இருந்து வந்து தாக்கியதால் இனி மேல் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு வரும் பத்திரிகையாளர்களுக்கு உரிய அனுமதி சீட்டு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய மந்திரிகள் மற்றும் வி.ஐ.பி.க்கள் தங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment