Tuesday, November 1, 2011

மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லைப்புற தமிழ்ப் பகுதிகளில் உள்ள அரச காணிகளை அரசு முறைகேடாக பெரும்பான்மையினருக்கு வழங்கப்படுகின்றன-கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் குற்றச்சாட்டு (பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்)

Tuesday, November 01, 2011
மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லைப்புற தமிழ்ப் பகுதிகளில் உள்ள அரச காணிகளை அரசு முறைகேடாக பெரும்பான்மையினருக்கு மட்டுமே வழங்குவதாக குற்றஞ்சாட்டியுள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் இது மறைமுகமான திட்டமிட்ட குடியேற்றம் என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;சிறுபான்மையினராகிய தமிழ் பேசும் மக்களுக்கு அரச காணியை கிழக்கு மாகாண சபை வழங்குவதற்கு பல காணி வழங்கல் நிர்வாக முறைமையையும் சட்ட திட்டங்களையும் மத்திய அரசும் கிழக்கு மாகாண சபையும் கையாளும் நிலையில் கீழ் குறிப்பிடப்படும் அரசகாணியை சகோதர இனத்திற்கு எவ்வாறு மத்திய அரசு பகிர்ந்தளித்துள்ளது?

இது விடயத்தில் எந்த இடத்திலாவது காணி வழங்கல் முறைகள் கடைப்பிடிக்கப்பட்டனவா அல்லது மாவட்ட காணிக்குழுவின் சம்மதம் அல்லது அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் போன்றோரின் அனுமதி பெறப்பட்டதா அல்லது இவர்களுக்கு அறிவிக்கப்பட்டதா? கிழக்கு மாகாண சபைக்கு தகவலுக்காகவேனும் தெரிவிக்கப்பட்டதா அல்லது கிழக்கு மாகாண சபை மூடிமறைக்க முனைகின்றதா? இவ்விடயம் மறைமுகமாகவும் இரகசியமாகவும் செய்யப்பட்ட காரியமாகும். இதில் எவ்வித வெளிப்படைத் தன்மையும் பேணப்படவில்லை.

எல்லைப்புறங்களில் மூவினமக்களும் தொடர்ச்சியாக வாழ்ந்து வரும் போது இது தமிழர்களுக்கும் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் காணிகள் வழங்கப்படுகின்றன. மத்திய அரசின் திணைக்கள உயர் அதிகாரிகள் மட்டுமே இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். இது ஒருவகையான மறைமுகத் திட்டமிட்ட குடியேற்றமா?

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் புனாணை கிழக்கு கிராம சேவையாளர் பிரிவில் ஓமடியாமடு பகுதியில் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் முப்பது ஏக்கர் காணியை 15 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு இத்திட்ட அதிகாரிகள் தலைமையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிராமங்களான வெட்டிப்போட்டசேனை, பெரியாத்துவெளி, பாக்கு வெட்டிப் போட்ட மடு, கதிரக்கல் மலை, குதம்பாக் குடா, செங்கலடிப் பிரதேச பிரிவில் உள்ள கறுவாச்சோலை, கோப்பாவெளி,பெரிய ஆற்றுக்கு மேல் கண்டம், பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் கதிரைகல்மலையில் கிழக்குபக்கம், புளுக்குனாவ, உகணை, கெவிளியாமடு, கோம்பஸ்தலாவ பிரதேசங்களுக்கு அம்பாறை நெற்காணிப் பதிவேடுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த மூன்று பிரதேச செயலாளர் பிரிவிலும் அண்ணளவாக 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயக் காணிகளுக்கு அம்பாறை மாவட்ட மங்களகம விவசாய அலுவலகம் (ஏ.பி.சி.) ஊடாக நெற்காணிப்பதிவேடு (பி.எல்.ஆர்.) வழங்கப்பட்டு கிழக்கு மாகாண சபை முட்கம்பி வேலி அமைக்க உதவிகளையும் செய்துவருகின்றது. இக்காணிகள் பரம்பரை பரம்பரையாக தமிழ் மக்களின் கால்நடைகளின் மேய்ச்சல் தரையாக பாவித்து தற்சமயம் கால்நடைகளுக்கென ஒதுக்கப்பட்டுவிட்டன.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வடமுனைக்குமேல் வீரான் குளம் மகாவலி அபிவிருத்தித் திட்டம், வன பரிபாலனத் திணைக்களங்களுக்குரிய காணிகளையும் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் புல்லுமலை, மங்களகம, பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் கவிளியாமடு, புளுக்குனாவ, கோம்பகஸ்தலாவ போன்ற பகுதிகளில் உள்ள வன பரிபாலனத் திணைக்களங்களுக்குரிய காணிகளை ஒருவருக்கு ஒருதுண்டு ஐம்பது ஏக்கர் வீதம் 240 துண்டு 12,000 ஆயிரம் ஏக்கர் ஊர்காவல் படையினருக்கு குத்தகைக்கு மூன்று வருட, முப்பது வருட குத்தகைக்கு எல்லைப்பகுதியில் வழங்கி இருக்கின்றனர்.

பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் கச்சைக் கொடி, சுவாமி மலை கிராம சேவையாளர் பிரிவில் கெவிளியாமடு பகுதியில் பிரதான வீதி இருமருங்கிலும் திட்டமிட்டவாறு குடியேற்றங்கள் இரண்டு வருடங்களாக நடந்து வருகின்றன. சுமார் நூற்றி எழுபத்தைந்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டுள்ளன. இது சில வேளைகளில் கூடுவதும் குறைவதுமாக உள்ளது. இத்தோடு மத்திய மாகாணசபைக்குரிய வளமுள்ள காணிகள் பல நூற்றுக்கணக்கானவற்றை எமது பிரதேசத்தவரல்லாதவருக்கு பல வருட கால குத்தகைக்கு வழங்கும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது எமது வளத்தை இன்னொருவருக்கு விற்கும் நடைமுறைக்குச் சமமானதாகும். இதேவேளை புல்மோட்டை பகுதியிலும் காணி தொடர்பாக பல சம்பவங்கள் நடந்துவருகின்றன. தற்சமயம் 2008 ஆம் ஆண்டு தொடக்கம் காணி தொடர்பாக முழு இலங்கைக்கும் காணி உரிமைகளை பதிவு செய்தல் தொடர்பான சுற்று நிருபம் வெளியிடப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்படும் போது வடக்கில் மக்கள் இடம்பெயர்ந்து இருக்கின்ற நிலையில் இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என தமிழ்க் கட்சிகள் நிராகரித்திருக்கின்றன.

இவ்வேளையில் 2008/4 இலக்கமிடப்பட்டு கிழக்கில் காணித் துண்டொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான மற்றொரு சுற்று நிருபம் வெளியிடப்பட்டு மக்கள் ஆர்வமாக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து வருகின்றனர். இச் சுற்று நிருபத்துக்கமைய 2011 ஆம் ஆண்டில் காணி அற்றவர்களுக்கு காணிகளை பதிவு செய்வதற்கு கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அறிவித்துள்ளார். இச்சுற்று நிருபத்தில் கடந்த காலத்தில் வருடாந்த அனுமதிப் பத்திரம் பெற்றிருப்பவர்களும் வருடா வருடம் வருடாந்த அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கப்படாத பட்சத்தில் புதிதாக காணிகளைப் பெற்றுக் கொள்வதற்காக பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் வருடாந்த அனுமதிப்பத்திரம் காணி ஆணையாளர் 75 இலக்க படிவப் பெயருடன் வழங்கப்பட்டுள்ளது. இது சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ள காணிக்கான ஒரு ஆவணமாக இருப்பதால் காணிக்கான சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளவாறு அவற்றை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்படியல்லாமல் மிகவும் சுருக்கமான வழியில் ஒரு சுற்று நிருபத்தின் மூலம் இரத்து செய்ய நடவடிக்கை எடுப்பதை சட்டரீதியானது எனக் கொள்ள முடியாது எனப் பலரும் தெரிவிக்கின்றனர்.

திணைக்களத்தால் குறிப்பிட்டுள்ளது போன்று இவற்றை இரத்துச் செய்வதற்குரிய காரணமாக போலியான வருடாந்த அனுமதிப்பத்திரம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டிருப்பின் வழங்கப்பட்டுள்ள போலியானவற்றை கண்டுபிடித்து இரத்துச் செய்ய நடவடிக்கை எடுப்பதே பொருத்தமானதாகவும் அதற்குரிய அதிகாரிகளுக்குரிய கடமையாகவும் இருக்கும்.

எனினும் ஒரு சில போலியானவைகள் கண்டுபிடிக்கப்பட்டதற்காக கிழக்கு மாகாணத்துக்கு மட்டும் வருடாந்த அனுமதிப்பத்திரங்கள் முழுவதையும் இரத்துச் செய்ய நடவடிக்கை எடுப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். கிழக்கு மாகாண சபையினால் பயிர் செய்வதற்கு அல்லது வயல் செய்வதற்கென ஆகக் கூடியது ஒரு ஏக்கர் மட்டுமே புதிதாக வழங்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள வருடாந்த அனுமதிப்பத்திரங்களின் படி 3,4,5 ஏக்கர் என்ற அடிப்படையில் காணிகள் வழங்கப்பட்டுள்ளவற்றை இரத்துச் செய்து புதிதாக ஒரு ஏக்கரே வழங்க நடவடிக்கை எடுக்கின்ற வேளையில் அதிகமாக காணிகளை வைத்திருப்பவர்களுக்கு ஒரு ஏக்கர் காணி வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுப்பதால் இது அவர்களை பல்வேறு வகைகளிலும் மோசமாகப் பாதிக்கும். பல வருட காலமாக வருடாந்த அனுமதிப்பத்திரம் மூலம் பெற்றுக் கொண்ட காணிகளை பராமரித்து அபிவிருத்தி செய்து பேணிவருகின்ற நிலையில் இந்தக் காணிகளை மீளப் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது பொருத்தமானதல்ல.

கடந்த 30 வருட கால யுத்தம் காரணமாக ஏற்பட்ட சூழலால் வருடாந்த அனுமதிப்பத்திரத்தை தொடர்ந்தும் புதுப்பிக்க முடியாதிருந்த சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருந்தன. எனவே அவர்களுடைய வருடாந்த அனுமதிப்பத்திரக் காணிகளை குறிப்பிடப்பட்டுள்ள முழு விஸ்தீரணத்தையும் மீளப்பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அனுமதிப்பத்திரமும் உறுதியும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

எனவே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஒவ்வொரு நிமிடமும் தாமதிக்கும் போது பல்லாயிரக்கணக்கான காணிகள் இல்லாமல் போகும் நிலை ஏற்படும். சுற்று நிருபத்தில் குழப்பகரமாக உள்ள வருடாந்த அனுமதிப்பத்திரங்களைப் பெற்றவர்களுக்குப் பாதகமான விடயங்களை நீக்க நடவடிக்கை எடுக்கத் தாமதிக்கும் பட்சத்தில் கிழக்கு மாகாண சபையின் இந்தச் செயற்பாட்டை வழக்குத் தாக்கல் செய்வதன் ஊடாக தடுத்து நிறுத்த முயல வேண்டிய சூழ்நிலை காணி தொடர்பான ஆர்வலருக்கு ஏற்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அத்துடன் மேல் குறிப்பிடப்பட்டுள்ள வளமான காணிகளை பிறருக்கு வழங்குதல், திட்டமிட்ட குடியேற்றம், மத்திய அரசின் முறைகேடான காணிப்பங்கீடு, ஒருபக்கச் சார்பான காணிப்பங்கீடு போன்றன தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் செயற்பாடுகளை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இக் கடிதத்தின் பிரதிகள் மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் வீ.முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment