Sunday, November 6, 2011

சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதியம் – சுதர்சினி பெர்ணான்டோ பிள்ளை!

Sunday, November 06, 2011
சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதியம் வழங்கி அவர்களை திவிநெகும கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் திருமதி சுதர்சினி பெர்ணான்டோ பிள்ளை தெரிவித்தார்.

மட்டக்களப்பு தொகுதியிலுள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு அவர்களின் ஓய்வூதியம் தொடர்பாக விழிப்பூட்டும் கூட்டத்திலேயே பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சுதர்சினி பெர்ணான்டோ பிள்ளை மேற்கண்டவாறு கூறினார்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைவாக தேர்தல் தொகுதிகள் தோறும் சமுர்த்தி உத்தியோகத்தர்களை திணைக்களத்தின் கீழ் உள் வாங்கி அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டங்கள் இடம் பெற்று வருகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு தொகுதியிலுள்ள சமர்த்தி உத்தியோகத்தர்களக்கான கூட்டம் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இன்று (5.11.2011) காலை நடைபெற்றது.

இக் கூட்டத்தில் மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் சுதர்சினி பெர்ணான்டோ பிள்ளை,

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தற்போது சமுர்த்தி அதிகார சபையின் கீழ் பணியாற்றுகின்றனர். இவர்களை சமுர்த்தி திவிநெகும திணைக்களத்தின் கீழ் கொண்டு வந்து அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதியின் வழிகாட்டலில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திணைக்களத்தின் கீழ் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கொண்டுவரப்பட்டவுடன் அவர்களுக்கான ஓய்வூதியம் வழங்குதல் தொடர்பில் மூன்று வகையான மும்மொழிவுகள் வைக்கப்பட்டுள்ளன.

சமுர்த்தி உத்தியோகத்தர்களாக நியமனம் பெற்ற காலத்தை கணக்கிட்டு அவர்கள் மற்றும் அவர்களது மனைவி, பிள்ளைகள் ஓய்வூதியம் பெறும் வகையிலான ஓய்வூதியம் வழங்குதல், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் வழங்கிவரும் ஊழியர் சேமலாப நிதிக்கான பங்களிப்பை முழுத்தொகையாகவும் பெறும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் புதிதாக நியமனம் வழங்கப்பட்டு அவர்கள் நியமனம் பெறும் அன்றிலிருந்து சேவைக்குள் உள் வாங்கப்பட்டவர்களாக கருதப்படுவார்கள். சேவையிலிருந்து முற்றாக நிற்க விரும்பும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நஷ்ட்ட ஈட்டுக்கொடுப்பனவை வழங்குதல் ஆகிய மூன்று மும்மொழிவுகள் இந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ளன

சமுர்த்தி உத்தியோகத்தர்களை திவிநெகும திணைக்களத்தின் கீழ் கொண்டுவந்தவுடன் அவர்களுக்கு தற்போது மேற்கொள்ளும் வேலைத்திட்டங்களோடு இன்னும் சில வேலைகள், பொறுப்புக்கள் வழங்கப்படும்.

இந்த நடவடிக்கைகளை சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு விளக்கி கூறுமாறு சிறிலங்கா சுதந்திரக்கட்சியை பிரதி நிதித்துவப்படுத்தும் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையிலேயே நான் இன்று மட்டக்களப்புத் தொகுதிக்கு வருகை தந்துள்ளேன்.

எங்களுடைய இந்த திட்டத்தினை வேறு கட்சியினர் உங்களிடம் வந்து வேறு விதமாக கூறுவார்கள் என்பதற்காகவே எங்களை நேரடியாக உங்களை சந்தித்து இதை கூறுமாறு ஜனாதிபதியும் அமைச்சர் பசில் ராஜபசக்சவும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இது சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு கிடைத்துள்ள நல்ல சந்தர்ப்பமாகும் என அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு அமைப்பாளர் அருன் தம்பிமுத்து மற்றும் ஏறாவூர் அமைப்பாளரும் ஏறாவூர் நகர சபை தலைவருமான அலிசாகீர் மௌலான மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் மனோகிதராஜ் ஆகியொரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment