Friday, November 25, 2011

இலங்கை நல்லிணக்கத்தை எட்டுவதற்கு எந்தவொரு வெளிநாட்டு சக்தியினது ஆலோசனையும் தேவையில்லை-பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ!

Friday, November 25, 2011
இலங்கை நல்லிணக்கத்தை எட்டுவதற்கு எந்தவொரு வெளிநாட்டு சக்தியினது ஆலோசனையும் தேவையில்லையெனத் தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, நல்லிணக்க ஆணைக்குழு சமர்ப்பித்திருக்கும் அறிக்கையில் யாராவது குற்றவாளியாகக் காணப்பட்டிருந்தால் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது இறுதி அறிக் கையைத் தயாரித்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய எந்தத் தரப்புக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப் பிட்டார்.

சர்வதேச தொடர்புகள் மற்றும் தந்திரோபாயக் கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நேற்று நடைபெற்ற ‘போருக்குப் பின்னரான இலங்கையில் நல்லிணக்கம்’ எனும் தலைப்பில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்புச் செயலாளர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டிருக்கும் நிலையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையைக் கையளித்துள்ளது.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட் டிருக்கும் பரிந்துரைகளை அமுல் படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். எவராவது ஒரு நபர் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளார் என சாட்சியங்களுடன் நிரூபிக்கப் பட்டிருந்தால் அவர்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கையில் என்ன நடைபெற்றது என்பது பற்றி இலங்கைக்கே சரியாகத் தெரியும். வேறெந்தவொரு நாட்டுக்கும் உள்நாட்டில் உண்மையாக இடம்பெற்றது என்ன என்பது தெரியாது. எனவே, நல்லிணக்கம் பற்றி வெளித்தரப்பினர் எவரும் எமக்கு ஆலோசனை வழங்க முடியாது. எமது தேசிய பிரச்சினைக்கு வெளித்தரப்பினரால் தீர்வு வழங்க முடியாது.

நாமே உள்நாட்டில் தீர்வை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிராகக் கடந்தகால அரசாங்கங்கள் பல்வேறு வகையில் நடவடிக்கை எடுத்தன. எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துள்ளார். இதில் பாதுகாப்புத் தரப்பினர் திறமையாகச் செயற்படுகின்றனர். அவர்களின் மனிதாபிமான நடவடிக்கையைக் குறைத்து மதிப்பிடுவதற்கும், நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்கும் இலங்கைக்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இறுதிக்கட்ட நடவடிக்கையின் போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பாக சரியான தகவல்கள் வெளியிடப்படவேண்டுமென சில தரப்பினர் வலியுறுத்துகின்றனர். இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதுடன், இறுதிக்கட்ட நடவடிக்கையின் போது பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள், கொல்லப்பட்ட புலி உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினர் பற்றிய சரியான எண்ணிக்கை பெயர் விபரங்களுடன் கூடிய விரைவில் வெளியிடப்படும்.

இதுதொடர்பான கணக்கெடுப்பொன்று நடத்தப்பட்டு அதனை இறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அறிக்கை விரைவில் வெளியானதும் வெளிப்படைத் தன்மை பற்றி அறிந்துகொள்ள முடியும்.

பாதுகாப்புத் தரப்பினர் அனைவரும் முறையான பயிற்சிகளைப் பெற்றவர்கள் என்பதுடன், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டங்கள் பற்றி அவர்களுக்கு அறிவூட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கைக்கு எதிராகவும், பாதுகாப்புத் தரப்பினருக்கு எதிராகவும் பிரசாரங்கள் முன்னெடுக் கப்படுகின்றன.

இனங்களுக்கிடையில் மீண்டும் பிளவுகளை ஏற்படுத்துவதற்கு குறுகிய அரசியல் இலாபம் கொண்ட சில உள்ளூர் அரசியல் வாதிகளும், வெளிநாட்டிலுள்ள சில தரப்பினரும் முயற்சிக்கின்றனர். இவ்வாறான அரசியல்வாதிகள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதை விட இனங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்துவதற்கே முன்னுரிமை வழங்குகின்றனர்.

எனினும், நல்லிணக்கத்தில் இலங்கை அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு, இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியமர்த்தப் பட்டு, வடக்கு, கிழக்கில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இலங்கைக்கு தனக்குச் சொந்தமான கொள்கைக்கு அமைய நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகள் 7 அமைச்சர்களையும், 37 பாராளுமன்ற உறுப்பினர்களையும் படுகொலை செய்துள்ளனர். இது மாத்திரமன்றி தமிழ் அரசியல் தலைவர்கள், ஏனைய இயக்கங்களின் தலைவர்கள், புத்திஜீவிகள் எனப் பல தரப்பினரைக் கொலை செய்துள்ளனர். இது மாத்திரமன்றி பல குண்டுத் தாக்குதல்கள் என நாளாந்தம் மக்கள் பயந்தவாறே இருந்தனர். எனினும், இந்த நிலைமை முற்றாக மாற்றப்பட்டு, ஆசியாவிலேயே மிகவும் பாதுகாப்பான நாடாக இலங்கை மாறியுள்ளது என்றும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment