Monday, November 28, 2011புதுடெல்லி : ஜெர்மன் வங்கியில் கருப்பு பணம் பதுக்கியவர்களின் பெயர்களை வெளியிட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக டெல்லி வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: இந்திய தொழில்திபர்கள், அரசியல்வாதிகள் பலர் வெளிநாட்டு வங்கிகளில் பல லட்சம் கோடி கருப்பு பணம் பதுக்கியிருப்பதாக கூறப்படுகிறது. சுமார் 25 லட்சம் கோடி கருப்பு பணம் ஜெர்மன், சுவிட்சர்லாந்து, கேமென் தீவு போன்ற நாடுகளின் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இவற்றை மீட்க வேண்டும், கருப்பு பணம் பதுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பிரபல வக்கீல் ஜெத்மலானி வழக்கு தொடர்ந்தார். இதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட், மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டது. கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
ஜெர்மனியில் உள்ள லிச்டென்ஸ்டைன் வங்கியில் கருப்பு பணம் டெபாசிட் செய்திருந்த 26 இந்தியர்களின் பெயர்களை அந்நாட்டு அரசாங்கம் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று கடந்த 2008ம் ஆண்டு ஒப்படைத்தது. இதேபோல் ஜெனிவாவில் உள்ள எச்எஸ்பிசி வங்கியில் டெபாசிட் செய்தவர்களின் பட்டியலும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இவர்களின் பெயர்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வந்தது. வெளிநாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்றங்களில் வழக்கு தொடரும்போதுதான் பெயர்களை வெளியிட முடியும் என அறிவித்தது.
இந்நிலையில் ஜெர்மன் வங்கியில் கருப்பு பணம் பதுக்கிய 26 இந்தியர்களின் பெயர்களை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வெளிநாட்டில் பதுக்கிய பணத்துக்கு வருமான வரி மற்றும் 200 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ஐடி கமிஷனரால் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு டெல்லி, மும்பை மற்றும் சென்னை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜெனிவா எச்எஸ்பிசி வங்கியில் கருப்பு பணம் பதுக்கியவர்களின் வருமானம் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. இது முடிந்தபின் அவர்கள் பற்றிய விவரமும் வெளியிடப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment