Wednesday, November 9, 2011

தமிழ் தேசிய கூட்டமைப்பு இருப்பதையும் இல்லாமல்செய்யும் நகர்வினையே மேற்கொண்டுவருவதாக-சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்!

Wednesday, November 09, 2011
மாகாணசபையினை பலப்படுத்தி அதனை அதிகார பகிர்வாக மாற்ற அனைவரும் முன்வரவேண்டும் என தெரிவித்துள்ள கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் தேசிய கூட்டமைப்பு இருப்பதையும் இல்லாமல்செய்யும் நகர்வினையே மேற்கொண்டுவருவதாக தெரிவித்தார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலகம் நேற்று நடத்திய சிறுவர்கள் மற்றும் முதியோர் கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் உட்பட பலர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர்,

வந்தாரை வரவேற்கின்ற பல மரபு ரீதியான பண்புகளைக்கொண்டுள்ள இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் முதியோர் இல்லங்கள் அதிகரித்துச்செல்வதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இதனை மாற்றுவதற்கு சிறுவர்கள் சிறுவயது முதல் பெற்றோர்களை மதித்து நடப்பதே இந்த நிலையை மாற்றுவதற்கு ஏதுவாக அமையும் என்பது எனது கருத்து.

வெள்ள அனர்த்தங்கள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் பெரும்பாதிப்புகளை கடந்த காலத்தில் இடம்பெற்றபோது அதில் இருந்து மீளமுடியாது என நினைத்திருந்தோம் ஆனால் படிப்படியாக பாதைகள் அபிவிருத்திசெய்யப்பட்டு, மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கும் ஜனாதிபதியினால் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவந்தன. இந்த நிலையில் வீடுகளை இழந்த மக்களுக்கும் தற்போது தங்களது வீடுகளை கட்டிக்கொள்வதற்கு பணம் வழங்கப்பட்டுவருகின்றது.

இந்த வளர்ச்சிப்போக்கு தொடர்ந்து எமது மக்களுக்கு இருக்கவேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பு. ஆகையினால் மக்களும் சிறந்தமுறையில் சிந்திக்கவேண்டும்.

சில அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் சிந்திக்கவேண்டும். இன்றை பத்திரிகையில் மக்கள் அல்லது நாங்கள் பிச்சையெடுத்தாலும் எங்களது கௌரவத்தை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று இருந்தது. அபிலாசைக்காக, விடுதலைக்காக மக்கள் தமது பக்கம் நிற்பதாக எமது பகுதி அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.

எமதுமக்கள் பட்டினி கிடந்து எதனை சாதிக்கமுடியும். எதனையும் சாதிக்கமுடியாது. இந்த நாட்டுக்கு கிடைக்கின்ற நிதியை பெற்று எமது மக்களுக்கு செலவுசெய்யும்போதுதான் அவர்களிடையே வறுமை ஒழியும். அதனையே நாங்கள் சிந்திக்கின்றோம். மிக நீண்டகாலமாக இதனைத்தான் நாங்கள் செய்துவருகின்றோம்.

நாட்டின் மொத்த வருமானத்தில் வடகிழக்கு தாருங்கள் என்று பறித்தெடுத்து செலவுசெய்த அரசியல்வாதிகள் இங்கு இருக்கவில்லை. இப்போதுதான் அந்த சம்பவங்கள் இடம்பெறுகின்றன. எமது மக்களின் தேவைகள் தொடர்பில் கேட்டுப்பெறக்கூடிய சூழல் உள்ளது.

இந்தநிலையில் ஒன்றும் விளங்காத, தெரியாமல் நாங்கள் இலட்சியத்துக்காக சோரம்போகாமல் இருக்கின்றோம், இவர்களிடம் பிச்சை கேட்கமாட்டோம் என்று கூறிக்கொண்டிருந்தால் அவர்களுக்கு அறியாமையில் இருக்கின்ற மக்கள் வாக்களிக்கலாம் ஆனால் எங்களுடைய ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு பிள்ளையின் கல்வி வளர்ச்சிக்கும் இந்த அரசியல் என்ன செய்யப்போகின்றது என்பது தொடர்பில் மக்கள் சிந்திக்கவேண்டும்.

ஏனென்றால் பெரிய எதிர்பார்ப்பு ஒன்று இருந்தது. ஏதோ விடுதலை கிடைக்கும், கிடைக்கப்போகின்றது என்று. ஆனால் அந்த நம்பிக்கை எல்லோரிடமும் இல்லாமல்போய்விட்டது. இப்போது இருக்கின்ற நம்பிக்கை ஒட்டுமொத்தமான அதிகாரப்பகிர்வு முறையென்றால் அது மாகாணசபை முறைமை. இந்தமுறையை மட்டக்களப்பு மாவட்ட மக்கள், கிழக்கு மாகாண மக்கள் வைத்துள்ளோம். அதை வைத்து ஆட்சி செய்துகொண்டிருக்கின்றோம். இந்த முறையை பலப்படுத்தவேண்டும் என்று நான் சொல்லுகின்றேன். அது தொடர்பில் நான் தொடர்ந்து பேசிவருகின்றேன்.

இதனை பலப்படுத்தி ஒரு அதிகார பகிர்வாக மாற்றவேண்டிய பொறுப்பு உங்களுடையது. ஒன்றுமே செய்யாமல் இருப்பவற்றையும் இல்லாமல் செய்வதற்கான முயற்சிகள்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கடந்தகால நகர்வுகள் தெரிகின்றது.

அது தொடர்பில் நான் வேதனையடைகின்றேன். ஏனென்றால் அரசியல் ரீதியாக தெளிவில்லாமல் இருக்கின்ற பொழுது அதனை விளங்கப்படுத்துவது என்பது மிகவும் கஸ்டமான நிலையில் இருக்கின்றது.

எமது மாவட்ட மக்கள் சோழர் ஆண்டகாலம் முதல் வெள்ளையர் ஆண்டகாலம் வரை, பின்னர் வந்த தமிழரசுக்கட்சி ஆட்சிவரை அதன்பின்னர் வந்த விடுதலைப் போராட்ட ஆட்சிவரைக்கும் யாரோ வந்து சொன்னார்கள் அழிந்தோம் என்ற வரலாறுதான் மட்ட்களப்பில் உள்ளது. அதனை யாரும் மறுக்கமுடியாது.

மிக அண்மையில் நடந்துமுடிந்த ஆயுதப் போராட்டமும் அப்படித்தான். மிக அதிகளவான மாவீரர்கள் குடும்பங்களும், அதிகளவான விதவைகளையும் கொண்டுள்ளோம். இது ஏன் நடந்தது, நடந்துவிட்டது தொடர்பான விடயங்களை யாரும் ஆராய்வதில்லை.

நாங்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த விடயங்கள் அழிந்துள்ளன. ஆகையினால் எமது மக்கள் சிந்திக்கவேண்டும். ஏதோ நாங்கள் மாகாணசபையையாவது பெற்று வெற்றிபெற்றுள்ளோம்.

நாங்கள் கடந்த காலங்களை திரும்பிப்பார்க்க வேண்டும். 60 வருடங்களாக பெற்றுத்தர முடியாத விடயங்களை மூன்று நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்து பெற்றுத்தருவார்கள் என்று நம்பமுடியாது. உலகம் மாறிக்கொணடிருக்கின்றது என்பதை எமது படித்த மக்கள் விளங்கிக்கொண்டு எமது பாமர மக்களுக்கு எடுத்துச்செல்லவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அதனை வாசித்தவுடன் எனக்கு சிரிப்பு வந்தது. ஏனென்றால் அவர் ஓர் இடத்திலே கூறி இருக்கின்றார். உலகமாற்றம், அரசியல்மாற்றங்கள் வருகின்ற பொழுது அழிக்கப்படுவார்கள், அழிக்கப்பட்டார் அதனை அரசாங்கம் பயன்படுத்தியது என்று சொல்லியிருக்கிறார்.

ஒரு படித்த மனிதன், ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் இதனை அந்த நேரமும் படித்திருப்பார். அவருக்கு தெரியும். அமெரிக்க தாக்குதலுக்கு பின்னர் பயங்கரவாத இயக்கங்களுக்கெதிராக நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியபோது உலகமும் அதன் போக்குக்கு ஏற்றாற்போல் மாறிவிட்டது என்பது அவருக்கு தெரியும்.

ஆனால், முள்ளிவாய்க்காலுக்கு முன்னர் நடந்த சண்டையின்போது சில பத்திரிகைகளில் முன்பக்கத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொன்னார் விடுதலைப்புலிகள் மீண்டும் எழுவார்கள், 30ஆயிரம் சிங்களவர்களின் உடல்களை கொழும்புக்கு அனுப்புவார்கள் என்று போடப்பட்டிருந்தது. அன்று உலக ஒழுங்கு மாறியிருந்தபோதும் அப்படி பேசினார். அதுபோல் இன்று பேசுகின்றார் இது நடக்கும் என்று எதிர்பார்த்தோம், நடந்துவிட்டது. இன்று உலகம் மாறியிருக்கின்றது. அதனை நாங்கள் பயன்படுத்தி எமது மக்களுக்கு விடுதலையை பெற்றுக்கொடுப்போம் என்று கூறுகின்றார்.

இதுபோன்றுதான் மிக நீண்டகாலமாக எம்மை ஏமாற்றியுள்ளனர். இதன்காரணமாகத்தான் நாங்கள் அழிந்துள்ளோம். இன்று நாங்கள் மிகவும் கவலையடைகின்றோம்.

ஏனென்றால் மட்டக்களப்பு மாவட்டம், கிழக்கு மாகாணம் என்பது மிக அதிகளவான் வளங்களைக்கொண்ட மாகாணம்.மழைநாட்டிலே பெய்யும் மழை நீர்கள் வழிந்தோடும் ஒரு அழகிய பிரதேசம் கிழக்கு மாகாணம். நீர்வளம் கொண்ட மாகாணம்.

இங்கு மக்கள் அழிவடைந்து இன்னும் பஞ்சத்தில் உள்ளனர் அல்லது நினைத்ததை செய்யமுடியாத நிலையில் மக்கள் இருக்கின்றார்கள் என்றால் அது மக்களின் குறைபாடு அல்ல அது மக்களை வழிநடத்தியவர்களின் குறைபாடு.

ஆகையினால் மிக நீண்டகால பிரச்சினைகள் காரணமாக எமது மக்கள் அழிந்தார்கள் என்ற உண்மையினை ஏற்றுக்கொள்ள வேண்டும். தற்போது வந்திருக்கும் இந்த அரசியல் சூழல் ஓரளவு நிம்மதியை தந்து கொஞ்சம் கொஞ்சமாக கல்வியிலே, பொருளாதாரத்திலே, அன்றாட நடைமுறையிலே மாற்றங்கள் ஏற்பட்டு நாங்கள் வளர்ந்து வருகின்றோம். முன்னுதாரனமாக செயற்படுகின்றோம் என்ற உண்மையினை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஆச்சரியமிக்க மாகாணமாக கிழக்கு மாகாணத்தை மாற்றவேண்டிய சிந்தனை கிழக்கு மாகாண மக்களுக்கு இருக்கவேண்டும். அழிவடைந்த மாகாணமாக மாற்றமுடியாது.

ஆகையினால் அரசியல் ரீதியான மாற்றங்களினால்தான் ஆச்சரியமிக்க மாகாணமாக மாற்றமுடியும் என்ற உண்மையினை அரசியல்ரீதியாக சிந்திக்கின்ற மக்கள் கஸ்டத்தையும், வலிகளையும் வேதனையையும் தாண்டி இன்று ஒரு நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றோம். இதனை முன்கொண்டு செல்லவேண்டும். அபிவிருத்தியினை நோக்கி முன்நகரவேண்டும்.

No comments:

Post a Comment