Thursday, November 24, 2011வியன்னா : சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் புவி வெப்பநிலை உயர்வு காரணமாக ஆஸ்திரிய மலை பகுதிகளில் பனி சீசன் தாமதமாகிறது. இதனால், மெஷின் வைத்து செயற்கையாக பனி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஐரோப்பாவின் பிரமாண்ட மலைத் தொடர் ‘ஆல்ப்ஸ்’. ஆஸ்திரியாவில் ஆரம்பித்து, ஸ்லோவேனியா, இத்தாலி, சுவிட்சர்லாந்து என்று பிரான்ஸ் வரை நீண்ட மலைத் தொடர். ஆஸ்திரியாவின் பாதி பகுதியை இது ஆக்கிரமித்திருக்கிறது என்பதால் பல மாதங்கள் இதமான கிளைமேட் நிலவும். பல பகுதிகளில் கோடையில்கூட வெப்பம் குறைவாகவே இருக்கும். ஆஸ்திரியாவின் டிரோல், சால்ஸ்பர்க் மலைகளில் அக்டோபரில் இருந்தே பனி படரத் தொடங்கும். மெல்ல அதிகரித்து, நவம்பரில் மலையே பனியாக காட்சியளிக்கும். பனிச்சறுக்கு விளையாட்டுகள் சூடு பிடிக்கும். உலகம் முழுவதும் இருந்து வீரர், வீராங்கனைகள் வருவார்கள்.
வெப்பநிலை அதிகரித்திருப்பதால் இன்னும் பனி சீசன் தொடங்கவில்லை. மலையில் பனிச்சறுக்கு விளையாட்டுகள் நடக்கும் இடம் முழுக்க ஆங்காங்கே மெஷின் வைத்து பனி உருவாக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெப்பம் அதிகம் இருப்பதால், செயற்கை பனி உருகி விடுகிறது. இதனால், பனிச்சறுக்கு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதுபற்றி பனிச்சறுக்கு விளையாட்டு ஏற்பாட்டாளர்கள் கூறும்போது, ‘‘புவிவெப்பநிலை உயர்வு, சுற்றுச்சூழல் பாதிப்பால் பனி உருவாவது தாமதமாகிறது. அனேகமாக டிசம்பரில்தான் பனி உருவாகும் என்று தெரிகிறது. அதற்கு பிறகே போட்டிகள் நடத்த முடியும்’’ என்றனர்.
ஆஸ்திரியாவின் ஆல்ப்ஸ் மலையில் பனியின்றி ‘வெறிச்சோடி’ கிடக்கிறது. பனிச்சறுக்கு போட்டிகள் நடக்கவுள்ள சரிவு பகுதியில் மெஷின் உதவியுடன் உருவாக்கப்பட்ட பனி, திட்டு திட்டாக தெரிகின்றன. உள்படம்: பனி உருவாக்குவதற்காக இன்ஸ்பர்க் பகுதியில் மலை சரிவில் வைக்கப்பட்டுள்ள ஸ்னோ மேக்கிங் மெஷின்.
No comments:
Post a Comment