அடுத்த சில தினங்களில் வெளியிடப்பட உள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்கழுவின் அறிக்கையில், பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி ஒளிப்பரப்பிய இலங்கையின் கொலைக்களம் விவரணப்படத்தில் காணப்படும் இலங்கை இராணுவத்தினரை கைதுசெய்து, சட்டத்திற்கு முன் நிறுத்துமாறு பரிந்துரை ஒன்று அடங்கியுள்ளதாக நம்பதகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் உலக தமிழர் பேரவை 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கிய புலிகள் அமைப்பின் தளபதிகளில் ஒருவரான ரமேஷிடம் விசாரணை நடத்தும் விடியோ படத்தில் உள்ள இராணுவத்தினரை அடையாளம் கண்டு, அவர்களையும் கைதுசெய்து, சட்டத்திற்கு முன் நிறுத்துமாறும் ஆணைக்குழு பரிந்துரை செய்ய உள்ளது.
மேஜர் தரம் முதல் சுமார் 100 இராணுவத்தினரை கைதுசெய்வதற்கான பரிந்துரைகளை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் வகையில், அதற்கு தேவையான திட்டங்களை வகுப்பதற்காக பாதுகாப்புஅமைச்சின் புலனாய்வு ஆலோசகர் கபில ஹெந்தாவித்தாரனவின் கண்காணிப்பின் கீழ் விசேட குழுவொன்றை நியமித்து, சம்பந்தப்பட்ட இராணுவத்தினரை கைதுசெய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்படும் இராணுவத்தினர் மீது மனித உரிமைகளை மீறியமை தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டும் குற்றம்சுமத்தப்பட உள்ளதுடன், அவர்களுக்கு எதிராக இலங்கை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட உள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் செனல் 4 தொலைக்காட்சி இலங்கைக்கு எதிராக முன்னெடுத்து வரும் பிரசாரங்களை ஒரளவுக்கேனும் கட்டுப்படுத்தலாம் என அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
அதேவேளை காணாமல் போன நபர்கள் தொடர்பாக முறைப்பாடுகளை செய்தவர்களுக்கு இழப்பீடு வழங்குதல், அல்லது காணாமல் போன நபருக்காக இலவசமாக வீடொன்றை வழங்குவது தொடர்பிலும் ஆணைக்குழு பரிந்துரைகளை செய்யவுள்ளதுடன், காணாமல் போனவர்கள் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் பரிந்துரை செய்யவுள்ளது.
புலி பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மக்களை மீட்டமை குறித்து, இலங்கை படையினருக்கு நன்றி தெரிவித்துள்ள ஆணைக்குழு, இதன் மூலம் போர் மனநிலையில், இருப்போரை மேலும் தம்வசப்படுத்தாலம் என கருதியுள்ளது.
இந்த நிலையில், கைதுசெய்யப்பட உள்ள இராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்ப உறவினர்களின் மன தைரியம் சிதையும் என்பதால், மூன்றாம் தரப்பினர் ஊடாக அவர்களையும், அவர்களின் குடும்பங்களை அரசாங்கம், பராமரிக்கும் என தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் பரிந்துரையின் கீழ் கைதுசெய்யப்பட உள்ள அனைத்து இராணுவத்தினருக்கும் தலா ஒரு வீடு இலவசமாக வழங்கப்பட உள்ளது. அத்துடன் கைதுசெய்யப்படும் இராணுவத்தினருக்கு ஜனாதிபதி இரண்டு வருடங்களுக்குள் பொதுமன்னிப்பு வழங்குவார் என ஜனாதிபதியின் செயலகம் ஊடாக உறவினர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தவிர தற்போது முகாம்களில் வைக்கப்பட்டுள்ள புலிகளின் உறுப்பினர்களுக்கு எதிராக பகிரங்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைக்க உள்ளது. ஜனாதிபதி ஊடாக இவர்களில் ஒரு பகுதியினருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் எனவும் ஆணைக்குழு பரிந்துரைக்க உள்ளது. வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்களை மகிழ்விக்க இதன் மூலம் நல்லிணக்க ஆணைக்குழு எதிர்பார்த்துள்ளது.
அதேவேளை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் அரசாங்கத்திற்கும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட உள்ளதுடன், ஜனாதிபதி அந்த தவறை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளதுடன், இதன் மூலம் தாமும், தமது அரசாங்கமும் பாடங்களை கற்றுக்கொண்டதாக வெளிகாட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment