Tuesday, November 15, 2011

நோர்வேயின் அறிக்கைக்கு இலங்கை அரசு இராஜதந்திர ரீதியிலான அதிருப்தியை வெளியிடத் தீர்மானம்

Tuesday, November 15, 2011
புலிகளுடனான அமைதி முயற்சிகள் தோல்வியடைந்தமை தொடர்பாக நோரவேயால் வெளியிடப்பட்டிருக்கும் கருத்துக்கு இலங்கை அரசு இராஜதந்திர ரீதியிலான அதிருப்தியை வெளியிடத் தீர்மானித்துள்ளது.

இலங்கை அமைதி முயற்சிகள் தோல்வியடைந்தமைக்கு அரசும், புலிகள் இயக்கமும் பொறுப்பேற்கவேண்டுமெனக் கடந்த வாரம் நோர்வேயின் அரச சார்பற்ற அமைப்பு ஒன்று தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது. அத்துடன், இது தொடர்பாக பல விமர்சனங்களையும் அது முன்வைத்திருந்தது.

இந்நிலையில், மேற்படி விமர்சனங்கள் இறைமையுள்ள அரசு ஒன்றின் நற்பெயருக்கு சர்வதேச ரீதியில் களங்கத்தை ஏற்படுத்துமென அரசு கருதுவதாக மூத்த அமைச்சர் ஒருவர் நேற்றுத் தெரிவித்தார்.இதனடிப்படையில் இந்த விமர்சனங்கள் குறித்து நோர்வே அரசுக்கும் மேற்படி ஆய்வை நடத்திய நோறாட் அமைப்புக்கும் இராஜதந்திர ரீதியிலான அதிருப்தியை வெளியிட அரசு தீர்மானித்துள்ளது.

இன்னும் ஓரிரு தினங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.நோர்வே வெளியிட்ட அறிக்கையில் சமாதான முயற்சியில் இலங்கையின் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் அம்பலமானதால், பெரும் சங்டமான நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment