Tuesday, November 15, 2011

நாடு தொடர்ந்தும் பிளவடைந்த நிலையில் காணப்படுவதாக முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்!

Tuesday, November 15, 2011

நாடு தொடர்ந்தும் பிளவடைந்த நிலையில் காணப்படுவதாக முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். மத மற்றும் இன அடிப்படையில் பேதங்கள் நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அரசியல் கட்சிகள் குறித்து திருப்தி அடைய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கங்களில் மிலிந்த மொரகொட பல முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 2002ம் ஆண்டு நோர்வே மத்தியஸ்தம் வகித்த சமாதான முனைப்புக்களின் முக்கிய அரசாங்க உறுப்பினர்களில் ஒருவராக செயற்பட்டுள்ளார்.

1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையில் நீடித்த யுத்தம் காரணமாக சமூகத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் பல்வேறு விடயங்களில் தக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமூகம் என்ற ரீதியில் நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரத்திற்கு பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட கொள்கைகள் இன சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு மாறாக பிளவை விரிவுபடுத்தியது என அவர் தெரிவித்துள்ளார்.

சாதாரண சிங்களவர்கள் இனவாதிகள் என இலங்கைக்கு வெளியே கருதப்படுவதாகவும் உண்மையில் அவ்வாறான ஓர் நிலைமை கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமி;ழ் சிங்கள தேசியவாதக் கொள்கைகளில் தவறில்லை என்ற போதிலும், கடும்போக்குடைய தேசியவாத கொள்கைகள் பின்பற்றப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு கடும்போக்குடைய தேசியவாத கொள்கைகள் ஆபத்தாகவே அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மிதவாத அரசியல் கொள்கைகளை பின்பற்றி வரும் தம்மைப் போன்ற அரசியல்வாதிகளுக்கு இரண்டு தரப்பையும் சேர்ந்த கடும்போக்காளர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

பௌத்த மதம் நடுநிலையான கோட்பாடுகளையே விதந்துரைக்கின்றன எனவும், கௌதம புத்தனின் கோட்பாடுகளை பின்பற்றினால் பிளவுகள் ஏற்பட வாய்ப்பு கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் பேணப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் ரீதியாக மிக வலுவான உறவுகளைப் பேணுவதற்கு முயற்சிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

ஹொங்கொங் எவ்வாறு சீனாவுடன் மிக நெருங்கிய பொருளாதார உறவுகளைப் பேணி வருகின்றதோ அதேபோன்று இலங்கை இந்தியாவுடன் உறவுகளைப் பேண வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

பெரும்பான்மையான இலங்கையர்கள் இந்தியாவை அச்சுறுத்தலாகக் கருதுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று இந்தியாவும் இலங்கை விவகாரங்களில் கரிசனை காட்ட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய பிரதமர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்து பல வருடங்கள் கடந்துள்ளதாகவும் இது இலங்கையர்களை பெரும் அதிருப்தியடையச் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

புலிகளுடனான யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், நாட்டின் அரசியல்வாதிகளுக்கு மிகவும் முக்கியமான பொறுப்பு காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தினால் ஏற்பட்ட வடுக்களை ஆற்ற வேண்டிய மிக முக்கியமான பொறுப்பு அரசியல்வாதிகளைச் சாரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தின் பின்னர் நாடு மிக முக்கியமான ஓர் தருணத்தை எட்டியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்காலத்தை நல்ல நிலைக்கு மாற்றியமைக்கக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு தேவையான அத்திவாரத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அல்லது மற்றுமொரு முரண்பாடு வெடிப்பதற்காக அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் நோர்வேயினால் வெளியிடப்பட்ட சமாதான முனைப்புக்கள் குறித்த அறிக்கையில் முக்கிய பேச்சாளர்களில் ஒருவராக மிலிந்த மொரகொட கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment